நண்பர் -வணக்கம் அம்பலம் மச்சான். என்ன பேப்பருக்குள்ள மூழ்கிபோயிட்டாய் போல?

அம்பலம் – பேப்பர் மட்டுமல்ல நாடே அநுர அலையில் மூழ்கியுள்ளது. மாற்றம் நல்லதாக அமைந்தால் சரிதான்.

நண்பர் – நல்லதாக அமையும் என்றுதான் நம்பிக்கை உள்ளது

அம்பலம் – சரி நேற்று என்ன அரசமரத்தடிக்கு வரவில்லை?

நண்பர் – தேர்தல் முடிவுகளை கண்முழிச்சி பார்த்ததால உடம்பு சரி இல்லை. மனிசி ஒரே கொம்பல்தான் வயசுபோன நேரத்தில கண்முழிச்சி இருக்கனுமா என்று.

அம்பலம் – வயசு போனாலும் நாட்டைபற்றி சிந்திக்காம இருக்கலாமா மச்சான். இவளுகளுக்கு எங்க இதுகள் விளங்கபோகுது – ரி.வி சீரியல் மட்டும்தான் தெரியும் .
பாரு மச்சான் அம்பாறையில் ஆக போக 45000 வாக்குகள்தான் தமிழ் வாக்குகள் 65 ஆயிரம் போடவே இல்லை. ஏதோ மயிரிழையில் தப்பி பிழைத்து ஒரு தமிழ் ஆசனம் வந்தது கொஞ்சம் நிம்மதிதான். கட்டாயம் வாக்களிக்க ஒரு சட்டம் அநுர கொண்டுவர வேண்டும்.

நண்பர் – அம்பாறையில் வீட்டுல அதிருப்தி இருந்தது உண்மை தான். இருந்தாலும் வீட்டுக்கு போட்டியா இருந்த சங்குக்கு எதிர்பாத்த வாக்குகள் கிடைக்கவில்லை. ஏனோ தெரியல.

அம்பலம் – என்ன கதை இது. அது அந்த கூட்டணியின் இணைப்பாளரே உள்ள இருந்து சங்குக்குக்கு குழி தோண்டியதாகதான் தெரியுது.

நண்பர் – நானும் நினைச்சது சரிதான். இவர்தான் இதுக்கு அம்பாறை பொறுப்பு இணப்பாளராம் என்று அறிந்த உடனே யோசிச்சன் இது சாத்தியப்படுமா என்று. தனக்கு வேட்பாளராகி போட்டி போட்டு வெல்ல முடியாது. ஆனால் சங்குக்கு எம்.பி வரக்கூடாது என்றுதான் இவரின் எண்ணம் இருந்திருக்காம்.

அம்பலம் – நான் சொல்ல வந்ததை நீயே சொல்லிட்டாய். தெரியாமலா மச்சான்? இந்த மண்ணில பொறந்து வளர்ந்த நமக்கு யார் யார் எப்படி அவங்க செயல் எப்படி என்று நமக்கு தெரியாதா?. இதில் பாதிக்கப்பட்டவர் சங்கின் பக்கம் மக்களை அவதானிக்க வைத்த வேட்பாளர் புஸ்பராசா. அவர் ஒரு நல்ல மனிதர். மாவட்டத்திற்கு ஏற்ற ஆளுமை. ஆனால் ஆளுமையான ஒருவர் சங்கில் வேட்பாளராக வரக்கூடாது என்று புஸ்பராசாவுக்கு காய்களை ஏற்கனவே வெட்டியுள்ளார் இந்த இணைப்பாளர் . இந்த கூட்டணி அவரின் வீட்டு சொத்து இல்லையே. அதனால புஸ்பராசாவை வேட்பாளராக பல பக்க அழுத்தத்தால் சேர்க்க வேண்டியாகிற்று.

நண்பர் – அப்படியா? ஒரு கட்சிக்கு பலமான வேட்பாளர் வருவதைதானே கட்சிக்குள் இருப்பவர்கள் விரும்புவார்கள். இது என்ன அம்பலம் எல்லாம் மாறி நடந்திருக்கு!

அம்பலம் – மக்கள் நினைப்பதற்கு மாறி நினைப்பவர்தானே இந்த இணைப்பாளர் உனக்கு தெரியாததா? கல்முனையில் பிறந்த உனக்கு இது புதிசா?

 சங்கு வென்று ஆசனத்தை பெறக்கூடாது. ஆனால் குறிப்பிட்ட வாக்கு எடுத்தா போதும் அது தனக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை கேட்க உதவும் என்றுதான் இந்த கோ(கூ)டினேட்டரின் கனவு இருந்திருக்கு. பல புத்திஜீவிகளின் கட்டாயத்தில் வேட்பாளராக சம்மதித்த புஸ்பராசா வேட்பாளராக வருவதும் உறுதியானதும் பெரிதாக மக்கள் அறியப்படாத வாக்குகளை சேகரிக்க ஆளுமையற்ற பலரை (ஒரு சிலரை தவிர) தேடி தேடி வேட்பாளராக்கியுள்ளார் இந்த கோ(கூ)டினேட்டர்.
அது மட்டுமா இந்த கூட்டணியின் பொறுப்பாளர்  எந்த பிரசாரத்திலும் பெரிதாக சிரத்தை எடுத்து சங்குக்கு வாக்கு சேகரிக்க முற்படவில்லை. எந்த கூட்டத்திலும் பெரிசா காணல்ல.

நாங்கள் என்ன சந்திர மண்டலத்திலா இருந்த எல்லாத்தையும் நடப்பவைகளை இந்த அரசமரத்தடியில் இருந்து அலசி ஆராய்ந்துதானே இருந்தோம் .அதுதான் நடந்திருக்கு.

இவர் நோகாம நொங்கு குடிக்க பார்த்திருக்கார். புஸ்பராசாவுக்கு ஒரளவு இணையாக என்றாலும் ஆறு ஏழு வேட்பாளரை போட்டிருந்தால் பரவாயில்லை. இதில் புஸ்பராசா தனது ஆளுமை தனது கடந்த கால சேவைகள் தனக்கு இருக்கும் அறிமுகங்களை வைத்து மாவட்டம் பூராக முயற்சித்துள்ளார். இதில் மற்ற வேட்பாளர் லிங்கனின் முயற்சியும் இருந்தது. மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவு . எல்லாம் சேர்ந்து வேலை செய்தாதானே பரப்புரை மக்களையும் போய் சேரும் . இது இந்த கூட்டணியின் முக்கிய பங்காளி கட்சியின் முக்கியஸ்த்தரை அம்பாறைக்கு பொறுப்பாக போட்ட. நடந்தது இந்த வேலியே பயிரை மேய்ந்த கதைதான இது.

நண்பர் – கோடினேட்டர் என்கிறாய் கூடினேட்டர் எங்கிராய் யாரு என்று சொன்னதானே மக்களுக்கும் தெரியும்.

அம்பலம் – வெளிப்படையாக சொல்ல அவசியம் இல்ல. மக்களுக்கு இவரைபற்றி தெரியும். இவர் மாநகரசபையில் இருந்து என்ன நாடகம் ஆடின என்றும் தெரியும். அதுதான் இந்த சூழ்ச்சிக்கு கடவுள் கொடுத்த தீர்ப்பு .ஒரு தேசியப்பட்டியலும் இல்லை.
விளங்குமா?

அரசமரத்தடியில் அலசும் பல விடயங்கள் தொடரும்….