செல்லையா-பேரின்பராசா
இலங்கையின் தேர்தல் சட்டதிட்டங்களை மீறி வாக்காளர்களுக்கு அரிசி மூடைகளையும் சாராயப் போத்தல்களையும் விளையாட்டுக் கழகங்ளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் மற்றும் பல உதவிகளையும் கையூட்டல்களாக வழங்கி வாக்கு கேட்க வேண்டிய தேவை எனக்கில்லை ஆனால் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் இருந்த நிலையிலும் அந்த அரசியல் அதிகாரம் இல்லாத நிலையிலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலன் கருதி நான் எவ்வாறான பணிகளைச் செய்தேன் என்பதை எமது மக்கள் சீர்தூக்கிப் பார்த்து எனக்கு வாக்களித்தால் மட்டுமே நான் அதனை ஏற்றுக் கொள்வேன் இதனை விடுத்து கையூட்டல்களை வழங்கிப் பெறப்படும் எந்தவொரு வாக்கும் எனக்குத் தேவையில்லை.
இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது தவிசாளருமான சோ.புஸ்பராசா குறிப்பிட்டார்.
சமூக செயற்பாட்டாளர் பாசம்புவி தலைமையில் பாண்டிருப்பு அருச்சுனர் வீதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளர் சோ.புஸ்பராசா அங்கு மேலும் பேசுகையில்.
இன்று அம்பாறை மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகியுள்ளது இம் மாவட்டத்தின் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒரணியில் போட்டியிட வேண்டுமென்று தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் சமயத் தலைவர்களும் என பலரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர் இதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் மட்டும் ஏற்க மறுத்து தனிவழி சென்று அம்பாறை தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தனர்.
இருப்பினும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் எண்ணங்கள் அபிலாசைகள் வலிகள் என்பவற்றை உணர்ந்த அனைவரும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக ஒற்றுமையாக சங்கு சின்னத்தில் போட்டியிடும் நிலை உருவானது.
தலைமைத்துவப் போட்டியும் பதவி மோகமும் கொண்டு இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எவ்வாறு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் ஐக்கியம் பற்றிப் பேசமுடியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசமுடியும்.
இன்று வீடு சிதைந்து விட்டது மாவை அண்ணனை வீட்டில் இருந்து விரட்டிவிட்டார்கள் சிறிதரன் வீட்டின் ஒரு பகுதியைப் பிடித்துவிட்டார் சம்பந்தன் ஐயாவின் மூலமாக இடைக் காலத்தில் வாடகைக்கு வீட்டுக்கு வந்தவர் ஆட்சி உறுதியைக் காண்பித்து உரிமை கொண்டாடுகின்றார் அவருக்கு யாழ் மாவட்டத்தில் தோல்வி வந்தால் தேசியப் பட்டியலுக்கு வாக்கு சேகரிக்க அம்பாறையில் சில தம்பிமார் இவர்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வேடதாரிகள் என்பதை மக்கள் நன்கறிவர்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் மாற்று சமூகத்தினர் கல்வி சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் பலமடைந்துள்ளனர் தமது இனத்தை விருத்தி செய்வதிலும் முன்னணியில் உள்ளனர் இதனையிட்டு நாம் பொறாமைப்படக் கூடாது.
ஆனால் அம்பாறையில் எம்.பிக்களாகவிருந்த தம்பி கோடீஸ்வரனும் தம்பி கலையரசனும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலன் சார்ந்து செய்த சேவைகளைப் பகிரங்கப்படுத்த முடியுமா? மாறாக பாராளுமன்றத்தில் பேசினால் மட்டும் போதாது அங்கு பேசியதற்கு செயல் வடிவம் கொடுக்க அயராது உழைத்திருக்க வேண்டும்.
அரசியல் அதிகாரம் எதுவுமற்ற நிலையில் நான் பல பணிகளைச் செய்துள்ளேன் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 269 கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளைப் பராமரிக்கும் வட்டமடு மேச்சல் தரைக்கு உரித்தான 4000 ஆயிரம் ஏக்கர் காணியை மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் கபளீகரம் செய்து நெற்செய்கை மேற்கொண்டனர் இத்தருணத்தில் இப் பண்ணையாளர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன் மாவை சேனாதிராசா மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ் எம்.பிமார்களிடம் முறையிட்டு தமது மேச்சல்தரையை மீட்டுத்தருமாறு அழுது புலம்பினர் இவர்கள் எந்த உதவியும் செய்யாததால் ஈற்றில் என்னிடம் வந்தனர்.
இதற்கமைய களத்தில் இறங்கிய நான் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும்அரசாங்க உயர் மட்டங்களுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் வட்டமடு மேச்சல் தரை பற்றிய சகல ஆவணங்களையும் சேகரித்து அவற்றை கோப்புக்களாக்கி சமர்ப்பித்தேன் அப்போது இதன் உண்மைத்தன்மையை அவர்களுக்கு புரிய வைத்தேன்.
இதன் காரணமாக நீதி மன்ற வழக்குகளை சந்தித்தேன் இதற்காகவேண்டி இருதடவை சிறைவாசம் சென்றேன் இன்று வட்டமடு மேச்சல் தரையை மீட்டுக் கொடுத்ததால் ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச கால்நடை பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் என்னை பாராளுமன்றம் அனுப்புவதற்கான செலவை மேற்கொண்டு களத்தில் நின்று உழைக்கின்றனர்.
அஃதே அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் மயப் பெரியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆசீவாதமளித்து எனது வெற்றிக்காக உழைக்கின்றனர் இதற்கு காரணம் வெறுமனே அறிக்கை வேந்தனாக இருக்காமல் களத்தில் இறங்கிப் போராடியமையாகும்.
மீன் குஞ்சுக்கு நீச்சலை கற்றுக் கொடுக்கத் தேவையில்லை காரணம் புத்ததகப் பைகளைச் சுமக்கும் வயதில் தமிழின விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவன் பின்னர்ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்தவன் நான் இதனை விடுத்து சமூகத்தை ஏமாற்றி அங்கும் இங்குமாக கட்டிட ஒப்பந்த வேலை செய்தும் மண்ணை தோண்டியும் மலையை குடைந்தும் புதையல் தோண்டியும் குறுக்கு வழியில் பணம் தேடியவனும் அல்ல.
இதே போன்று தமிழர்களின் பூர்வீக நிலங்களை தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் மஹிந்தராஜபக்வின் ஆட்சிக் காலத்தில் கபளீகரம் செய்ய முற்பட்ட தருணத்தில் அதனை தடுத்து நிறுத்தினேன்.
சமூக முரண்பாடுகளை உண்டு பண்ணும் போலி கட்டுக் கதைகளைப் பரப்பாமலும்எனவே பேலித் தேசியம் பேசாமல் உண்மைத்துவமாக தமிழினப் பற்றாளனாக வாழும் எனக்கு உங்கள் பெறுமதியான வாக்கை அளிக்குமாறு கேட்கின்றேன் என்றார்.