செல்லையா பேரின்பராசா 

இந் நாட்டில் வாழும் தமிழினம் பெரும்பான்மை இன மக்கள் அனுபவிக்கும் சகலவிதமான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எமது தமிழ்த் தலைவர்கள் அன்று  சாத்வீக வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தனர் இப் போராட்டங்கள் வெற்றியளிக்காமலும் பல்வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு தமிழினம் ஆட்பட்டதால் தமிழ் இளைஞர்கள் மாற்று வழியின்றி ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு ஆளாகினர் இந் நிலையில் தமிழின விடுதலைக்காக ஆயதம் ஏந்திப் போராடி பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பியவர்களுள் நானும் ஒருவன் என்ற வகையில் எனக்கும் தமிழினத்தின் வலிகள் நன்கு தெரியும் இதனை விடுத்து குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து மக்களை ஏமாற்றி பொய்களைக் கூறி அரசியல் வியாபாரமும் அரசியல் விபச்சாரமும் செய்பவன் அல்ல மாறாக எனது இறுதி மூச்சு உள்ளவரை எமது மக்களுக்கு சேவையாற்றி மடிவதே எனது கொள்கையாகும்.

இவ்வாறு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சங்குசின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா குறிப்பிட்டார்.

கல்முனை சேனைக்குடியிருப்பில் ஓய்வு பெற்ற பிரபல கணித பாட ஆசிரியர் எஸ்.குணசேகரம் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சோ.புஸ்பராசா அங்கு மேலும் பேசுகையில்.

அம்பாறை மாவட்டட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இம்மாவட்டத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் புத்திஜீவிகள் சமூகத் தலைவர்கள் சமயத் தலைவர்கள் உள்ளிட்டோர் ஒன்று கூடி தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரே கூரையின் கீழ் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கவேண்டுமென்று பொதுவான தீர்மானத்தை எடுத்து அறிவித்தனர்.

இந்த தீமானம் மேற்கொள்ள முக்கிய காரணம் கடந்த கால பொதுத் தேர்தல்களின் போது இரண்டு தடவைகள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பல கூறுகளாகப் பிரிந்து நின்று தேர்தலை சந்தித்ததால் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமையாகும்.

இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு ஐந்து தமிழ்க் கட்சிகள் உடன்பட்ட போதும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டும்  பொது நலனை கருத்தில் கொள்ளாது  தமது சுயலாபங்களுக்காக பிரிந்து சென்று அம்பாறையில்  தனித்து போட்டியிடுகின்றனர்.

அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  தீர்க்கதரிசனமாகச் சிந்தித்து 2004 இல் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒற்றுமைப் படுத்தி இருபத்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற வரலாற்றை சிதைத்த நயவஞ்சகத்தனத்தை நன்குணர்ந்து  வீட்டுச் சின்னத்துடன் வலம் வரும் இலங்கைத் தமிழ் அரசுக் க.சியினரை அரசியல் அரங்கில் இருந்து விரட்டியடிக்க தமிழரின் ஒற்றுமையை விரும்பும் தன்மானத் தமிழர்கள் உறுதி பூண வேண்டியது காலத்தின் கடமையாகும்.

தந்தை செல்வா அண்ணன் அமிர்தலிங்கம் போன்ற தியாகத் தமிழ்த் தலைமைகளால் கட்டி காக்கப்பட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சி நீதி மன்றம் வரை சென்று பதவி மோகமும் அதிகார மமதையும் கொண்ட மொத்த வியாபாரிகளின் கையில் சிக்குண்டுள்ளது இதற்கு அம்பாறையில் உள்ள சில்லறை வியாபாரிகள் சூடு சொரணையின்று வாக்கு கேட்கின்றார்கள்.

அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்கள் ஒருகணம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் கடந்த காலத்தில் எம்.பிக்களாக இருந்த தம்பிமார் செய்த உருப்படியான பணிகள் என்னவென்று சிந்தித்தால் விடை பூச்சியமாகும்.

உரலுக்கு ஒரு பக்ககம் அடி விழும் ஆனால் தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி விழுவது போன்ற நிலையில் அம்பாறைத் தமிழர்கள் உள்ளனர் இந் நிலையில் மீண்டும் ஒரு தடவை எமது பாராளுமன்ற பிரதிதிநிதித்துவத்தை இழந்தால் எமது நிலை என்னவாகும்.

பிரதேச சபைத் தவிசாளராகவும் பின்னர் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்த காலத்தில் நான் செய்த சேவைகளை ஒரு கணம் சீர் தூக்கிப் பாருங்கள் இதே வேளை அரசியல் அதிகாரம் அற்ற நிலையில் வட்டமடு மேச்சல் தரையை பாதுகாக்க நீதி மன்றம் சென்று தன்னந்தனியனாக போராடி வெற்றி கண்டதையும் இதற்காக நாற் இரண்டு தடவைகள் சிறைவாசம் சென்றதையும் தொல் பொருள் ஆய்வு என்ற போர்வையில் அம்பாறை  தமிழர்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்ய முனைந்த போது தனித்து நின்று போராடி இதனையும் தடுத்தேன் அப்போதெல்லாம் எம்.பிமாராக இருந்த தம்பிமார் எங்கிருந்தார்கள்.

எனவே எமது மக்கள் இந்த யதார்த்தத்தினை உணர்ந்து எமது சின்னமாகிய சங்கு சின்னத்திற்கும் எனது விருப்பு இலக்கத்திற்கும் ஆணை வழங்குமாறு கேட்கின்றேன் என்றார்.