வி.சுகிர்தகுமார்    

 தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் போது மௌனமாக இருந்தவர்கள் பாராளுமன்றத்தில் பேசி வட்டமடு மேய்ச்சல் தரையினை மீட்டுக்கொடுத்ததாக இன்று பேசுகின்றனர் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார்.


ஜக்கிய தமிழத்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயாலத்தினை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று மாலை (04) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட செயலாளர் க.வசந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வேட்பாளர்களான சோ.புஸ்பராசா, சுப்ரமணியம் தவமணி, ஆகியோரும் கிழக்கு தமிழர் ஒன்றிய செயலாளரும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளரும் வா.குணாளன் ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர்கள் சங்க தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் , வம்மியடிகுள மீன்பிடிசங்கத்தலைவர் ஆ.பேரின்பராசா உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.


வருகை தந்த வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்;. இதன் பின்னராக வேட்பாளர்களும் மக்களும் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இக் கூட்டத்தில் , ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தொடர்ந்தும் உரையாற்றுகையில் வட்டைமடு மேய்ச்சல் தரையினை மீட்க போராடி வெற்றி கண்டது நான் அல்ல. ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் பால் பண்ணையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள். அவர்களின் உதவியுடன் இத்தரையினை மீட்பதற்காக சட்ட ரீதியாக போராடினோம். பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். வழக்குத்தாக்கல் செய்தோம். அதில் வெற்றியும் கண்டோம்.


இதன் காரணமாக இன்று 30 ஆயிரம் கால்நடைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு நாள் வருமானமாக 4 இலட்சம் வரை அவர்கள் பெறுகின்றனர். இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் பாராளுமன்றத்தில் பேசி வட்டமடு மேய்ச்சல் தரையினை மீட்டுக்கொடுத்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார் என்றார்.