முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகன விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வாக்குமூலம் வழங்க சென்ற நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, ​​பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத் தயார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

மனு மீதான பரிசீலனை அக்டோபர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
பெர்னாண்டோ கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, ​​153 ‘லங்கா சதொச’ ஊழியர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உட்பட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (ஒக்டோபர் 23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகர்த்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது