அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர்!
வி.சுகிர்தகுமார்
தேசியம் எனும் போர்வைக்குள் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர் என சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட செயலாளர் வசந்தன் தலைமையில் ஆலையடிவேம்பு வை. எம். சி. ஏ.மண்டபத்தில் இடம் பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து (18) அக்கரைப்பற்றில் கூட்டம் இடம் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இக் கூட்டத்தில் , வேட்பாளர்களான சோ.புஸ்பராசா, சுப்ரமணியம் தவமணி, பாலசுந்தரம் பரமேஸ்வரன் ஆகியோரும் , ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் இராஜ இராஜேந்திரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் செல்வராசா ,ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர்கள் சங்க தலைவர் ,உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கட்சிகள் யாவும் தமது கட்சிகளை மறுசீரமைப்பு செய்யுங்கள். கடந்த காலத்தை போலன்றி தற்போது தொழிநுட்பம் கூடிய காலம். முழு உலகத்தையும் கைத்தொலைபேசியில் காணும் காலம். இதற்கேற்றால் போல் நாமும் மாறவேண்டியுள்ளது.
அம்பாரையில் ஒரு பிரதிநிதிக்காக 150 பேர் தமிழ் பிரதேசத்தில் போட்டியிடுகின்றனர். 14 வீதம் தமிழ் மக்கள் வாழும் அம்பாரையில் இது சாத்தியமில்லை என்பதற்காக அனைவரையும் ஒற்றுமைப்படுத்த பல சமூக அமைப்புக்கள் ஆலய நிருவாகங்கள் கடைசி நிமிடம் வரை முயற்சி எடுத்தது. அதனை சிதைத்தவர்கள் தமிழரசுக்கட்சியினர்.
எதிர்கால சந்ததிகளின் நலன் கருதாமல் விட்டுக்கொடுப்பிற்கு இடமின்றி தனித்து நிற்க தீர்மானித்தனர்.
இவர்கள் ஏற்கனவே பாராளுமன்றம் சென்று மக்களது குறைகளை தீர்க்காமல் மீண்டுமொரு சந்தர்ப்பத்தை கோருகின்றனர். இதற்கான தீர்ப்பை மக்களே வழங்க வேண்டும் என்றார்.
இங்கு உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க.செல்வராசா திருகோணமலைக்கும் அம்பாரைக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தது. ஆனால் அம்பாரையில் பிரிந்து நின்று இந்த நிலையினை உருவாக்கியவர்கள் தமிழரசுக்கட்சியினர் என பகிரங்கமாக தெரிவிப்பதாக கூறினார். இதில் மும்முரமாக செயற்பட்டவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றார்.