நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆய்வுக் கூடங்களில் போதியளவு வசதிகள் இல்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து ஆராய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சில வகை தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான இரசாயனங்கள் உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.

இலங்கைக்கு தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யும் போது, உணவுப் பரிசோதகர்களால் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுங்கப் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வியாபாரத்தளங்களில் விற்பனை செய்யப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்து தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொள்வதாக உபுல் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.