தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (24.08.2024) இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சம்மந்தமான விடயங்களை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

எமது பொது வேட்பாளரது பிரசார நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றியும், பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டதால் தென்பகுதியில் ஏற்படுகின்ற அழுத்தங்களின் பிரகாரம் தென்பகுதியின் பிரதான வேட்பாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புக்களும், கோரிக்கைககளும் வந்தவண்ணமுள்ளன.

பேச்சுவார்த்தை சம்மந்தமான விடயங்களை எப்படி நாங்கள் கையாள்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது.

இது மிகவும் ஆக்க பூர்வமான சந்திப்பாக இடம்பெற்றதுடன் அதிக கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரையும், அதே நேரம் வரும் பேச்சுவார்த்தைகளையும் எவ்வாறு கையாள்வது பற்றியதான அனுமதியையும், ஆலோசனைகளையும் மத்திய குழு வழங்கியுள்ளது.

அத்துடன், பொதுவேட்பாளரை நாம் கைவிடுவதற்கான சாத்தியம் இல்லை. 

எனினும், எங்களுக்கு அழைக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகளில் எமது மக்கள் எதற்காக பொது வேட்பாளரை களமிறக்கினரோ அல்லது எந்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என பொது வேட்பாளரை களமிறக்கினரோ அந்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதான வேட்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியது எமது கடமை.

இந்நிலையில், அந்த விடயத்தை எப்படி கையாள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.