கல்முனையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!
-24.08.2024

அரவி வேதநாயகம்

பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா கல்முனையில் நாளை 24 ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

கல்முனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய மண்டபத்தில் கமு/உவெஸ்லி உயர்தரப் பாடசாலை “76 C” நண்பர்கள் வட்டத்தினதும் கல்முனை வடக்கு கலாசார பேரவையினதும் ஏற்பாட்டில் வடிவேல் பிரபாகரன் (ஓய்வுநிலை அதிபர்) தலைமையில் 2024.08.24ம் திகதி மு.ப 10 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக இராமகிருஷ்ண மிசன் உதவி பொது முகாமையாளர் சுவாமி சுரச்சிதானந்தர் கலந்துகொள்ளவுள்ளதுடன் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள், ஓய்வுநிலை அதிகாரிகளென பல உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள இவ்விழாவை சமத்துவ மக்கள் நல ஒன்றிய சமூக அமைப்பின் செயலாளர் பா.மேனன் தொகுத்து வழங்கவுள்ளார்.

“நீலையூர் சுதா” எனும் புனைபெயருடன் சிவபாதசுந்தரம் சுதாகரனின் கிராமிய மணங்கமளும் வகையில் நாட்டுப்புற வாழ்கை, நிகழ்கால நாட்டு நடப்புக்கள் என அனைவரும் ரசித்து வியக்கும் வகையிலான உயிரோட்டமுள்ள கவிதைப் படைப்புக்கள் தொகுப்பாக “கொத்துவேலி” எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமதி.லலிதா சுதாகரனால் “கிடுகு வீடு” எனும் தலைப்பிலும் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டு பெருவரவேற்பை பெற்ற “நீலையூர் சுதா”, பல ஆலய இறுவட்டுக்களுக்காக பாடல்களையும் எழுதியுள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் வடக்கு எல்லையின் விவசாயக் கிராமமான பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட “கொத்துவேலி” நூலாசிரியரான பைந்தமிழ் சுடர் சுதாகரன்
கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார்.

“கொத்துவேலி” கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழாவின் ஊடக அனுசரணையை கல்முனை நெற் ஊடக வலையமைப்பு மற்றும் @Saivamum_Tamizhum YouTube தளம் என்பன வழங்குவதுடன் நிகழ்வை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது