வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இல்மனைற் அகழ்வதற்கான களவிஜயத்தை மேற்கொண்டுவந்த அதிகாரிகளிடம்
பொதுமக்கள் பாரிய எதிர்ப்பை தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.


இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை திருக்கோவில் விநாயகபுரம் கோரைக்களப்பு முகத்துவாரப்பகுதியில் இடம்பெற்றது. நேற்று திங்கட்கிழமை அதிகாலை இல்மனைற் அகழ்வுக்கு பொறுப்பான தம்சிலா எக்ஸ்போர்ட் கம்பனி நிருவாகிகளும் ஊழியர்களும்
முகத்துவாரத்தில் கூடினர். கள ஆய்வுக்கான இயந்திரம் மற்றும் உபகரணங்க ளும் கொண்டு நிறுத்தப்பட்டன. அங்கு இல்மனைற் அகழ்வதற்கான சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்காக இக்குழுவினர் வந்திருப்பதாக தகவல்கள் காட்டுத்தீபோல் பரவியது.


ஒருசில நிமிடங்களில் பொதுமக்களும் குவியத்தொடங்கினர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன், காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சட்டத்தரணி கே.ஜெயசுதன் மற்றும் பலர் ஒன்று கூடினர் .


பொலிசாரும் அதிரடிப்படையும் அங்கு நின்றிருந்தார்கள். இதற்கு பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? என்பதை அறிய சற்று நேரத்தில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயந்தி வீரபத்திரன வரவழைக் கப்பட்டார்.
அதன் பின்பு அங்கு பேச்சு வார்த்தை இடம் பெற்றது . அங்கு குறிப்பிட்ட சிலரே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏனைய பொதுமக்கள் சுமார் 500 மீற்றருக்கு அப்பால்
பொலிஸாரால் தடுத்து நிறுத்தி வைக்க பட்டிருந்தனர்.


அங்கு அதன் போது கம்பனி நிருவாகி பொறியியலாளர் கூறுகையில்..
நாங்கள் இங்கே இல்மனைற் அகழ்வுக்காக வரவில்லை. அது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவே வந்திருக்கிறோம். அகழ்வு என்றால் பிரதேச சபையில் நாங்கள் அனுமதி பெற வேண்டும். ஆனால் இது ஆய்வு .எனவே பிரதேச சபை அனுமதி
தேவையில்லை.நேரடியாக கரையோரம் பேணல் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அனுமதி பெற்றுவந்திருக்கின்றோம். என்றார் .


அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், சட்டத்தரணி ஜெயசுதன் கூறுகையில்..
‘மக்கள் விரும்பாத முயற்சியை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள். நாங்கள் அதாவது பொதுமக்கள் இதனை கடந்த நான்கு ஆண்டுகளாக முற்றாக எதிர்த்து
வந்திருக்கின்றோம். இந்த நிலையில் இப்பொழுது தேர்தல் காலம். எனவே இப்படியான வேளையில் இச்சம்பவம் இன முரண்பாடுகளை குழப்பங்களைத் தோற்றுவிக்கலாம். எனவே இம் முயற்சியை கைவிடுங்கள். எமக்கு இந்த அகழ்வு மற்றும் ஆய்வு தேவையில்லை. இதனை நிறுத்தி விட்டு நீங்கள் பாதுகாப்பாக வெளியேறுங்கள்’ என்றனர்.

கரையோரம் பேணல் மற்ற கரையோர மூலவள முகாமை திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆய்வுக்கான அனுமதியை வழங்கியுள்ளார் என்று ஆவணம் காண்பிக்க பட்டது. அங்கு நின்ற சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்…


‘கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எமது பிரதேசத்திற்கு அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுவந்து எமக்குத் தெரியாமல் இல்மனைற் அகழ்வுப்பணிக்கான
ஆரம்ப கட்ட வேலையை மேற்கொள்ளத் தலைப்பட்டனர்.
அப்போது பொது மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். அதுமட்டுமல்ல மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து பாரிய எதிர்ப்பு மழைக்கு மத்தியில்
ஊர்வலத்தை நடாத்தி பிரதேச செயலரிடம் மகஜரும் கையளித்தோம். அத்துடன் அத்திட்டம் கைவிடப்பட்டது.


திருக்கோவில் பிராந்தியத்தில் இன்மனைற் அகழ்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைக்கு ஏகப்பட்ட முறைப்பாடுகள் எதிர்ப்புத்தெரிவித்து கிடைக்க பெற்றுள்ளது. பிரதேச சபையில் கண்டனத்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் எமக்குத்
தெரியாமல் மக்களுக்கு அறிவிக்காமல் இங்கு இன்று மீண்டும் வந்து செய்கின்ற வேலைக்கு நாம் பூரணஎதிர்ப்பை தெரிவிக்கிறோம். எந்தக்காரணம்கொண்டும்
திருக்கோவில் பிரதேச கனிய வளம் சூறையாட அனுமதிக்கமாட்டோம்’ என்றும் கூறினார்.
அதனிடையே அங்கு வந ;த பொதுமக்கள் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறி உரக்கக் குரல்கொடுத்தனர். அவர்கள் கூறியதாவது:


‘எமது கடலோரவளங்களை இழக்க நாம் தயாரில்லை. இல்மனைற் அகழ்ந்தால் எமது நிலத்தடிநீர் உவர் நீராகும்.இங்குள்ள தென்னை மரங்கள் தொடக்கம் சகல பயிர்பச்சைகளும் கருகும். புல்மோட்டை நல்ல உதாரணம். மற்றது கடலரிப்பு நடக்கும். ஏற்கனவே ஒலுவில் துறைமுகம் கட்டியதனால் இப்பிராந்தியம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எமது திருக்கோவில் முருகனாலயமும் பாதிக்கப்பட்டது. எனவே இன்னமும்
நாம் பாதிக்கப்பட விரும்பவில்லை. இங்கு இல்மனைற் அகழவேண்டாம். அதை மீறிச் செய்யமுற்பட்டால் நாம் தீக்குளிப்போம் என உரக்ககத்தினர். பகல் 12 மணியளவில் பேச்சு வார்த்தையின் பின்னர் ஆய்வு வேலை நிறுத்தப்பட்டது. மக்கள் கலைந்தனர்.


இவ் இல்மனைற் அகழும் திட்டத்தின்கீழ் அம்பாறை கரையோரத்தில் 46 கி.மீற்றர் தூரம் ஒலுவில் தொடக்கம் உமிரி வரை இன்மனைற் அகழப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக உமிரியில் 0.6 கி.மீற்றர் தூரம் அகழ்வதற்கான களவிஜயம் மூன்று நான்கு வருடங்களாக இடம்பெற்று வந்தது தெரிந்ததே. தற்போது அரச நிருவாகத்தின் கீழுள்ள கோரைக்குறுப் தென்னந் தோட்டப் பகுதியில் இதனை ஆரம்பிக்க முயற்சி நடைபெறுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.