இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று சந்திப்பு இடம் பெற்றது.
கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன்,இரா.சாணக்கியன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி.,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு,ஜனாதிபதித் தேர்தல், தமிழ்ப் பொது வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று சந்திப்பில்
பங்கேற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்புக்கு இரா.சம்பந்தன் எம்.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவர் திடீரெனச் சுகவீனமடைந்துள்ளமையால் மேற்படி சந்திப்பில் கலந்து
கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.