இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட பதில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வைத்தியர் சத்தியலிங்கம் விலகுவதாக கட்சி உறுப்பினர்கள் ஓரிருவருடன் கூறியதை அடுத்து அவ்வாறான எண்ணம் இருந்தால் உடனே கட்சி நன்மைக்காக விட்டு விடுங்கள் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட பதில் பொதுச்செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டுள்ள போது அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் அவரால் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
17வது தேசிய மகாநாடு
மேலும் குறிப்பிடுகையில், “நான் கேள்விப்பட்டேன் (சரியோ, தவறோ தெரியாது) நீங்கள் சில மன வேதனை மற்றும் வேலைப்பழு காரணமாக கட்சி பதில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக நமது கட்சி உறுப்பினர்கள் ஓரிருவருடன் கூறியதாக அறிந்துள்ளேன்.
அப்படியான எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்தை உடனே கட்சி நன்மைக்காக விட்டு விடுங்கள், தற்போது எமது கட்சி வழக்கில் இருந்து விடுபட்டு 17வது தேசிய மகாநாடு எப்போது இடம்பெறுமோ அதுவரை நீங்கள் பதில் பொதுச்செயலாளராக கடமைபுரிவதே நல்லது.
ஒரு பதில் பொதுச்செயலாளருக்காக இன்னுமொரு பதில் பொதுச்செயலாளர் தெரிவு செய்வது கட்சிக்கு ஆரோக்கியமானது இல்லை இன்னும் கட்சி பலவீனத்தை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வெளிக்காட்டும் இதனால் கட்சி பலவீனம் அடையும்.ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பலர் எழுதுவார்கள்.
இது வடக்கு மாகாணத்தைவிட கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறையில் பாரிய தாக்கத்தை பின்னடைவை ஏற்படுத்தும். வடமாகாணத்தில் உள்ள எமது கட்சி உறுப்பினர்களுக்கு இதை சொல்லியும் விளங்காது.எதை சொல்லியும் ஏற்கமாட்டார்கள் தட்டிக்கழிப்பார்கள் இதை நான் கடந்த 2010, ல் இருந்து 2024, வரை தமிழரசு மத்தியகுழுவில் அவதானித்த உண்மை.
மத்தியகுழு
ஏனெனில் 2020இல் பொதுச்செயலாளராக இருந்த மட்டக்களப்பு கே.துரைராசசிங்கம் பதவி விலகியபின்னர் உங்களை பதில் பொதுச்செயலாளராக மத்தியகுழு தெரிவு செய்தபின்னர் எங்களுக்கு மட்டக்களப்பு கட்சி உறுப்பினர்களாலும் கட்சி சாராத பொதுமக்களால் பாரிய விமர்சனமும் எதிர்ப்பும் வந்தது.
அது என்னவெனில் மட்டகளப்பானுக்கு வழங்கிய பதவியை பறித்து யாழ்ப்பாணத்தான் எடுத்துவிட்டான் என பச்சையாகவே கூறினர். துரைராசசிங்கம் பதவி விலகி இருந்தால் அந்த வெற்றிடம் கிழக்கு மகாணத்துக்கு அல்லவா பதில் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பலர் மட்டக்களப்பில் எமது கட்சி கூட்டங்களிலும் கேட்டனர், சமூக ஊடகங்களிலும் எழுதியுள்ளனர்.
அவர்களை சமாளிப்பதற்காக நாங்கள் கூறிய பதில் பொதுச்செயலாளர் பதவி விலகினால் அடுத்த துணைச்செயலாளராக 2019, மகாநாட்டில் தெரிவான சத்தியலிங்கம், சுமந்திரன் இருவரில் ஒருவரை மட்டுமே தெரிவு செய்யலாம் என்ற உபவிதி அடிப்படையில் தலைவர் மாவை அண்ணர் சத்தியலிங்கம் அவர்களை தெரிவு செய்தார் அதுதான் உபவிதி என மழுப்பான பதிலை வழங்கினோம்.
ஆனால் இறுதியாக கடந்த (19/05/2024) வவுனியா மத்தியகுழு கூட்டத்தில் சி.வி.கே.சிவஞானம் ஐயா கூறினார் உபவிதி படி வெற்றிடங்களை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவுக்கு இருப்பாதால் மத்தியகுழு அதனை செய்ய சட்டத்தில் இடமுண்டு மத்தியகுழு தீர்மானிக்கும் ஒருவரை எந்த பதவிகளுக்கும் நியமிக்கலாம் என கூறினார்
ஆனால் இதே மத்தியகுழு 2020, ல் மட்டக்களப்பு துரைராசசிங்கம் பதவி விலகிய போது உண்மையில் பதில் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு அதுவும் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ன காரணம் என்றால் 2019, மகாநாட்டிற்கு முன்பு இடம்பெற்ற பொதுச்செயலாளராக எனது பெயரை சீ.யோகேஸ்வரன் ஐயா முன்மொழிந்த போது அதனை வழிமொழிய விடாமல் பழைய நிருவாகம் அப்படியே இருக்கவேண்டும் என சுமந்திரன் துண்டெழுதி வாசித்து மீண்டும் மட்டக்களப்பு துரைராச்சிங்கத்தை பொதுச்செயலாளராக நியமித்தது வரலாறு தெரிந்தவிடயமே.
ஆகையால் 2020, ல் அவர் பதவி விலகி இருந்தால் மத்தியகுழு மனச்சாட்சிப்படி அந்த பொதுச்செயலாளர் பதவியை பெரும்தன்மையுடன் மட்டக்களப்புக்கு அல்லவா வழங்கப்பட்டிருக்கவேண்டும்.சிந்தியுங்கள்! மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள்.நாங்கள் புறக்கணிக்கப்போட்டோம் அல்லவா?
தமிழரசுகட்சியில் பல பின்னடைவுகள்
அன்று 2020, ல் துரைராச்சிங்கம் பதவி விலகியபோது உபவிதிப்படி பதில் பொதுச்செயலாளர் பதவி உங்களுக்கு துணைச்செயலளர் காரணத்தைக்காட்டி வழங்கியதாக கூறியவர்கள் இன்று. (19/04/ 2024, ல் மத்தியகுழு கூட்டம்தில் யாரையும் நியமிக்கலாம் என கூறுகிறார்கள்.அல்லது கதை விடுகிறார்கள். தாம் நினைத்ததை செய்வதற்காக எதையும் கூறுவார்கள் நாங்கள் தலையாட்டிக்கொண்டு இருக்கவேண்டும் அப்படித்தான் கட்சியில் நடந்தது எல்லாமே..!
இந்த கருத்தில் இருந்து நான் அல்லது நாம் விளங்குவது மட்டக்களப்பான் எவரும் பொதுச்செயலாளராக வரக்கூடாது என்ற எண்ணம் 2020. ல் இருந்து மத்தியகுழு உறுப்பினர்கள் குறிப்பாக வடமாகாணத்தை சேர்ந்த சிலரிடம் இருக்கின்றது என நாம் சிந்திப்பதில் தவறில்லை அல்லவா?
இப்போது உங்களிடம் வினயமாக நான் கேட்பது தயவு செய்து நீங்கள் நிரந்தரமாக ஒரு பொது செயலாளர் பதவி தெரிவாகி 17, வது தேசியமாநாடு இடம்பெறும் வரை எக்காரணம் கொண்டும் பதவி விலகவேண்டாம்.அந்த எண்ணம் கனவிலும் வரக்கூடாது.
அப்படி பதவி விலகினால் அந்த பதில் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கவேண்டும்.உங்களால் தர முடியுமா? அல்லது மத்தியகுழு உறுப்பினர்கள் சம்மதிப்பார்களா? தரமாட்டார்கள் அல்லவா? மட்டக்களப்புக்கு வழங்க பலர் மத்தியகுழுவில் எதிர்பார்கள் அது மீண்டும் வடமாகாணத்தில் யாரோ ஒருவருக்கு குறுகிய காலம்தானே என எம்மை சமாளித்து மத்தியகுழு வழங்கினால் வழங்குவீர்கள்.
ஆனால் அதன் பாதிப்பு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழரசுகட்சி பல பின்னடைவுகளை சந்திக்கும். இப்போதே வழக்கு போட்டாதால் பின்னடைவு அதைவிட இது இன்னும் வீழ்ச்சியை கட்சிக்கு தரும். ஏனெனில் பிரதேசவாத கருத்தை மூலதனமாக முதலீடாக வைத்து அரசியல் செய்யும் மட்டகளப்பு பிள்ளையானை போன்றவர்களுக்கு அவல் கிடைத்தது போல் இருக்கும் இதனை புரிவீர்கள் என நினைக்கிறேன்.
குறிப்பாக பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழரசுகட்சி ஒரு ஆசனம் கூட எடுக்க முடியாதநிலை வரும்.இப்போது எமக்கு அதுவும் கூட்டமைப்பு என்பதால் (TNA) 10, ஆசனங்கள் அடுத் தேர்தலில் 5, ஆக குறையும் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிட்டால் மட்டக்களப்பு, அம்பாறையில் தமிழரசுக்கட்சி ஒரு ஆசனம் கூட எமக்கு கிடையாது இதுதான் கள நிலைமை.
எதிர் பிரசாரங்களையும் மேட்டுக்குடி, வடக்கு என பிரதேசவாதங்களை தூண்டி அரசியல் செய்யும் மாற்றுக்கட்சிகளுக்கு வாய்ப்பாக மாறும்.
பிரதேசவாதம்
எனவே எனது தாழ்மையான வேண்டுகோள் தமிழரசுகட்சி வழக்கில் இருந்து மீண்டு புதிய நிரந்தர பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெறும் வரை சகிப்புத்தன்மையுடன் தமிழரசுகட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருப்பின் நீங்களே தொடர்ந்து பதில் பொதுச்செயலாளராக மகாநாடு முடிவுறும் வரை பதவியை தொடருங்கள்.
முக்கியமாக மீண்டும் புதிய தெரிவுகள் வழக்கு முடிந்து இடம்பெறுமானால் தலைவர் தெரிவுக்கு வேட்பு மனு கோரவேண்டாம், வாக்கெடுப்பு இன்றி சகல தெரிவுகளும் ஏகமனதாக நடந்தால் மட்டுமே கட்சியை காப்பாற்றலாம் என்ற உண்மையை உணர்ந்து மற்றவர்களுக்கும் உண்மையை கூறப் பாருங்கள்.
பிரதேசவாதம் இருக்க கூடாது என அதை முறியடிக்கவே மட்டக்களப்பில் பொதுச்செயலாளர் பதவி தரப்பட்ட வேண்டும் என கடந்த 27/01/2024, ல் மத்தியகுழுவில் ஞா.ஶ்ரீநேசனின் பெயரை நான் முன்மொழிந்தேன் அதைக்கூட சுமந்திரன் அணி குறுகிய மனப்பாங்குடன் பிரதேசவாத்த்துடன் நயவஞ்சகமாக நிராகரித்தனர் என்பது உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை.
நீங்கள் எந்த தெரிவுக்கும் கலந்து கொள்ளாமல் சுகவீனம் காரணமாக வரமுடியாது என அறிவித்தாலும் அன்று நடந்த சூழ்ச்சிகள். கழுத்தறுப்புகள், எல்லாம் உடனுக்குடன் அறிந்திருப்பீர்கள் அதை நான் கூற வேண்டியதில்லை.
நீங்கள் தற்போது பதில் பொதுச்செயலாளராக பதவியை தொடர்வதுதான் எமது கட்சிக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது” என்றும் அதில குறிப்பிடப்பட்டுள்ளது.