சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ்
பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது என பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
தனது தளத்தின் உரையாடல் பகுதியொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும்,
- உரலார் கேள்வி :- தமிழரசுக் கட்சியின் பதவி தேர்வுகளை ஆட்சேபித்து நீதிமன்றில் வழக்குத் தொடுத்தவர்கள் சுமந்திரனதும், சாணக்கியனதும் ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சுமந்திரனோ தான் கட்சிக்காக நீதிமன்றில் வழக்காடுவேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அங்கு என்ன நடக்கிறதென்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
உலக்கையார் பதில் :- இடியப்ப சிக்கல் தான். இடியப் போகிற வீட்டில் முதலில் அங்காங்கு வெடிப்புகள் தோன்றும். தமிழரசுக் கட்சியிலும் அதுதான் நடக்கிறது. வரவர அங்கு வெடிப்புகள் பெரிதாகிக் கொண்டே போகின்றன. இப்படியே போனால் ‘வீடு’ விழப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.
சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” என்கிறார்கள். அதுபற்றிய உண்மை ஏதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, சுமந்திரன் அப்படிச் செய்கிறார் என்றால் அவர் பெரிய தவறு செய்கிறார் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
பகையை வெளிப்படையாய்க் கையாளாமல் தந்திரமாய்க் கையாள்பவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள். ஒரு அரசியல் தலைவருக்கு புத்திசாலித்தனம் அவசியம் தான்!. ஆனால் தந்திரம் மிக்க அதிபுத்திசாலித்தனம் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்ச்சியைத் தான் தோற்றுவிக்கும்.
முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்த மூதறிஞர் ராஜாஜியைப்பற்றி சிலர், “ராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை. மூளையெல்லாம் சிந்தனை. சிந்தனையெல்லாம் வஞ்சனை” என்று கிண்டலாய்ச் சொல்வார்கள். அவரது அந்த அதிபுத்திசாலித்தனமும் பின்னாளில் மக்களால் ரசிக்கப்படாமல் போயிற்று.
நம் நாட்டு மூத்த தமிழ்த் தலைவர்களான தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருவரிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் செல்வாவை விட அதி புத்திசாலியாய் இருந்தார். ஆனால் அந்தப் புத்திசாலிதனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
நன்றி -Tamilwin