செயலாளர் பதவிக்காலம் தொடர்பில் இணக்கம் ஏற்பட்ட பின்னர் திட்டமிட்டு கட்சிக்கு எதிராக இவ்வாறு சூழ்ச்சி செய்யப்பட்டது ஏன்? விபரிக்கிறார் அன்பின் செல்வேஸ்
யாருக்கும் தெரியாத கட்சியின் இரகசியங்கள் எப்படி வெளியானது என்று மட்டக்களப்பைச் சேர்ந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் முக்கிய இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள், இரகசியமாக பேணப்பட வேண்டியது எது பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது எது என்பது ஒரு சில முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே தெரியும்.
குறிப்பாக செயலாளருக்கு அனைத்தும் தெரிந்திருக்கும். அப்படியான இரகசியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்காலிக செயலாளராக இருப்பவர் ஊடாகவோ அவருடன் நெருக்கமாக உள்ளவர்கள் ஊடாகவோ இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கலாம் அவற்றை கட்சி ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்.
குகதாசன் அவர்களுக்கு முதலாவது வருடமும் சிறிநேசன் அவர்களுக்கு இரண்டாவது வருடமும் செயலாளர் பதவிகளை வழங்குவது தொடர்பாக கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்ததன் பின்னர் ஒரு சுகமான நிலைமை உருவாக இருந்த நிலையில் திட்டமிடப்பட்டு இந்த வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது வருட காலப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் மாகாண சபை தேர்தல் ஏனைய தேர்தல்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளதால் இந்த செயலாளர் பதவி முக்கியமான ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் தாங்கள் எதிர்க்கும் சிறிநேசன் செயலாளராக இருந்தால் தங்களுக்கு அது பாதிப்பாக அமையும் என்ற காரணத்தினால் இவ்வாறான ஒரு சூழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.