இரகசியம் – பரகசியம் (13.01.2023)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வு, கட்சியின் தேசிய மாநாடு ஆகியவை பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் இப்போது அதிக ‘ட்ரெண்டிங்’கில் உள்ளன. அதைத் தவிர்த்து எழுத முடியாது என்பதால் அதை ஒட்டிய கொசுறுத் தகவலை இன்று தரலாம் என்று நினைக்கிறேன்.

வரும் 21 ஆம் திகதி – இன்னும் எட்டு நாள்களில் – கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் திருகோணமலையில் நடக்கவிருக்கின்றது. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

அதற்கு இடையில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை கூட்ட முயற்சிக்கின்றார் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா என்று குறிப்பிட்டிருந்தேன்.

தலைவர் தெரிவிற்கான தேர்தலுக்கு முன்னர் மத்திய குழு கூடுகின்றது. ஆனால் மாவை சேனாதிராஜா முன்னர் வலியுறுத்தியமைப் போன்று – கேட்டுக்கொண்டமையைப் போன்று – அடுத்த வரும் நாள்களில் அல்ல. மாறாக, தலைவர் தேர்தலுக்கு முதல் நாள்தான் – ஜனவரி 20ஆம் திகதிதான் – அது திருகோணமலையில் கூடுகின்றது.

முதல் நாள் கூடி, அடுத்த நாள் நடக்கும் தலைவர் தேர்வுக்கான தேர்தலை மத்திய குழு தடுக்கும் அல்லது மாற்று ஒழுங்குகளைச் செய்யும் என்று நம்புவதற்கு – அல்லது எதிர்பார்ப்பதற்கு – இடமில்லை.

ஆக, அடுத்த நாள் நடைபெறவிருக்கும் தலைவர் தேர்தலுக்கான தெரிவை நடத்துவதற்குப் பொறுப்புடைய தேர்தல் குழு ஒன்றை நியமிக்கும் முக்கிய பணியை முதல் நாள் நடைபெறும் மத்திய குழு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைவர் தேர்வு அடுத்த ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி நடைபெற்றாலும், கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட ஏனைய பதவிகளுக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை பெரும்பாலும் அதற்கு அடுத்த வாரம் 27ஆம் திகதி சனிக்கிழமைதான் நடைபெறும் என்று தெரிய வருகிறது.
நடைபெறும் தேர்தலில் வெற்றியீட்டும் புதிய தலைவர் தமது தலைமையில் செயற்படப் போகும் கட்சியின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு இடையில் ஆறு நாள்கள் கால அவகாசம் இருக்கும் என்பது நல்ல விடயமே.

புதிய தலைவர் யார் என்பது 21 ஆம் திகதி முடிவானாலும், அவர் 28ஆம் திகதி தேசிய மாநாட்டின் போது தலைமைப் பேருரையை ஆற்றி, பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். அதுவரை – அதாவது அடுத்த 15 நாள்களுக்கு – இப்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவே கட்சியை வழிநடத்துவார்.

தேசியமாடு மாநாடு நடந்து முடிவதற்கு அது இன்னும் எத்தனை விக்கினங்களைக் கடக்க வேண்டி இருக்கின்றதோ தெரியவில்லை. மாவை எம்பிரான் அருள் கடாட்சம்தான் அதற்கு முக்கியம். நான் மாவைக் கந்தனைச் சொன்னேன் நண்பர்களே…!

சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின், வழிகாட்டலில் வெளிவரும் முரசு –