ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு –

சஞ்சீவி சிவகுமார்
பிரதிப் பதிவாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

  1. அறிமுகம்
    ஒரு சமூகத்தின் கலை, பண்பாட்டுப் பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதில் அவற்றின் புலமைத்துவம் சார்ந்த வளர்ச்சி நிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்துப் பண்பாட்டின் நுட்பமான இயல்புகளை சமயத்தின் வழியாக, தத்துவ மரபின் வழியாக, கலை வழியாக, மொழி வழியாக, நாம் அறிய முடிகின்றது (கோபாலகிருஷ்ண ஐயர்,1992, பக்:2) எனக் குறிப்பிடுவார் கோபாலகிருஷ்ண ஐயர். இந்த நுட்பமான இயல்புகள் தான் புலமைத்துவ மரபாக நிலை பெறுகின்றன. இந்த வகையில் ஆலய வடிவமைப்புகள் கொள்ளும் சிற்பம், ஓவியம், கட்டிடக் கலை, நிருமானக்கலை என்பவற்றுடன் ஆலயச் செயற்பாடுகள் மற்றும் சடங்குகளில் வெளிப்படும் ஆற்றுகைக் கலைகளையும் புலமைத்துவம் சார்ந்த கலை மரபாகக் கொள்ளலாம். கலாநிதி பிரற்றிமா போவிஸ் தனது ‘இந்துப் புலமைத்துவப் பாரம்பரியம்’ நூலில் இந்து மதத்தின் காலத்தால் முந்திய தத்துவ நூல்களான தர்ம சாஸ்திரம் மற்றும் அர்த்தசாத்திரம் என்பவை அரசியல், சமூக, பொருளாதார அறங்களையும் தத்துவங்களையும் விபரிப்பதுடன் கலைகள் பற்றியும் கூறுவதைச் சுட்டிக் காட்டுகின்றார் (Pratima Bowes, 1978, gf;:140). சிற்பம், ஓவியம், இசை, நாடகம் என்பன இந்து மதத்தின் ஒப்பீட்டுப் பன்மைத்துவ அணுகுமுறையின் மையம் எனவும் இவர் சுட்டிக்காட்டுகின்றார் (Pratima Bowes, 1978).

இறைவனோடு மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் இடையறாத தொடர்புகளுக்கு கலை இலக்கியங்கள் தரும் பண்பாட்டுச் சிந்தனைகள் பெரிதும் பங்களிக்கின்றன. (கோபாலகிருஷ்ண ஐயர்,1992, பக்.எ). ஆகமம் சார்ந்த ஆலயங்களில் பூஜை முறைகள் ஊடாக நடன அடவுகள் மற்றும் அசைவுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. தேவாரம் முதற்கொண்ட புராணங்கள் வரிசைப்படுத்தி ஓதப்படுகின்றன.இதேபோல்உற்சவகாலப்பூசைகளின்போது இசை விசாரிப்புகளும் முன்வைக்கப்படுவதைக் காண்கிறோம். பூங்காவனத்திருவிழா, மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, திருக்கல்யாணம், ஊஞ்சல் என்பவையும் நிகழ்த்துகை மூலம் இறை தத்துவங்களை முன்வைக்கும் முறைமைகளே ஆகும். ஆகமம் சாராத ஆலயங்களில் இவை பல்வேறு சடங்குகள் மற்றும் சடங்காற்றுகைகள் ஊடாக நிறைவேற்றப்படுகின்றன. பத்ததிகளின் படிப்பு கிராமிய இலக்கியமாக விரிகிறது. இவை காலந்தோறும் கடைபிடிக்கப்பட்டு ஏற்றம் பெற்று நிலைநிற்கும் பண்பாடுகளாக நிலவி வருகின்றன.

இந்துப் பண்பாட்டு மரபுகளை அதன் கலை இலக்கிய பாரம்பரியத்தோடு இணைத்து நோக்குவது அதன் பரிமாணத்தை புரிந்துகொள்ள இன்றியமையாததாகும். (கார்த்திகேசு சிவத்தம்பி, 1995) இத்தகைய பண்பாட்டு மரபுகளை முன் கொண்டு செல்வதற்கும், நிலை நிறுத்துவதற்கும் காலவழுவின்றி அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கும் அது சார்ந்த புலமைத்துவச் செல்நெறி அவசியமானதாகின்றது. இன்னொரு வகையில் நோக்கினால் பண்பாட்டு மரபினை இயக்கிச் செல்லும் இயந்திரமாக அதன் புலமைத்துவக் கூறுகளை கூறலாம்.

இந்தவகையில் கல்முனையின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் மரபுகளின் குறியீடாக விளங்கும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் இப்பிரதேசத்தின் பண்பாட்டு பாரம்பரியமாக மகாபாரத கலாசாரத்தை பதினாறாம் நூற்றாண்டு முதல் கொண்டு இவ்வாலய சடங்காற்றுகைகளின் வழியாக கடைப்பிடித்து வருகின்றது. (F.X.C நடராசா, 1962) மகாபாரதக் கதை படித்தல், மற்றும் கதை நிகழ்வுகளை ஆற்றுகைகளாக நிகழ்த்தும் அரங்குகளாக இவ்வாலய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பதினெட்டு நாட்கள் நிகழும் சடங்காற்றுகைகளில் வனவாசம் நிகழ்வு ஒரு முழுமையான அணி உலா அரங்காக நிகழ்த்தப்படுகின்றது.(சஞ்சீவி சிவகுமார், 2017)

  1. ஆய்வின் நோக்கம்:
    பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வனவாசம் நிகழ்வு, கல்முனைப் பிரதேச மக்களின் பண்பாட்டோடு தோய்ந்த ஒரு ஆற்றுகைச் செயற்பாடாக பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய இதே காலப்பகுதியில் (கி.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில்) ஸ்பெயின் நாட்டைத் தளமாகக் கொண்டு வளர்ச்சி பெற்ற சமய, சடங்குசார் அரங்கமாகிய அணி உலா அரங்கினை (Processional Theatre) நேரொத்து இது காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. வெவ்வேறு புவியியல் அமைவுகளில், நெருக்கமான காலக்கோடுகளில் நேரொத்த நிகழ்த்துகைகள் வளர்ச்சி பெற்றுப் பரவியிருப்பது ஆய்வுக்குரிய வினாவாகும்.
    இவ் வனவாச நிகழ்வு, அணிஉலா அரங்கு (Processional theatre) எனும் அரங்கியல் செயற்பாட்டின் மூலகங்களான தலயாத்தரை (pilgrimage), அணி ஊர்வலம் (parade), பண்பாட்டுப் பொருந்துகை(Cultural mapping), மற்றும் கதைகூறல் /படிப்பினை (narrative) என்பவற்றை எவ்வாறு உள்ளடக்கி, உள்வாங்கி நிற்கிறது என்பதை ஆராய்வதும் இந்நிகழ்வினூடாக இந்து மதத்தின் இறையியல் சிந்தனைகள் சமூகத்தில் எவ்வாறு நிலை நிறுத்துகின்றது என்பது பற்றி ஆய்ந்தறிவதும் அணி உலா அரங்கின் கலைப் புலமைத்துவக்கூறுகள் இந்து மதத்தில் சடங்காட்டங்களுள் அமைக்கப்பட்டுள்ள முறையை ஆராய்வதும் இந்த ஆய்வின் நோக்கங்களாகும்.
  2. ஆய்வு முறை:
    ஆலயம் சார்ந்து கிடைக்கக் கூடிய வரலாற்று மூலங்கள் பகுப்பாய்ந்து அறிக்கைப்படுத்தப்பட்டதுடன் ஆலயச் சடங்காற்றுகை முறைகளும் வனவாசம் நிகழ்வின் நிகழ்வொழுங்குகளும் நிகழ்வை நேரடியாகக் கண்டு பெறப்பட்ட முதனிலைத் தரவுகளைக் கொண்டு பகுப்பாயப்பட்டது. இதன் மூலம் அணி உலா அரங்கின் அடிப்படை மூலகங்களான தலயாத்தரை (pilgrimage), அணி ஊர்வலம் (parade), பண்பாட்டுப் பொருந்துகை(Cultural mapping), மற்றும் கதைகூறல் /படிப்பினை (narrative) என்பவற்றை பாண்டிருப்பு வனவாசம் எவ்வாறு உள்ளடக்கி உள்ளது என்பதை அதன் நிகழ்வுக் கூறுகள், கடைப்பிடிப்புகள், நிகழ்வொழுங்குகள் என்பவற்றைக் கொண்டு விபரிக்கப்படுகிறது. வனவாசம் நிகழ்வு இப்பிரதேச மக்களின் ஆன்மீக உணர்வில் ஏற்படுத்தும் தாக்கங்களை கண்டறிமுறையில் ஆராய்வதன் மூலம் (நேரடிக் கள ஆய்வின் மூலம்) இந்து மத இறையியல் சிந்தனை மக்களிடையே நிலைநிறுத்தப்படும் முறைமை விரித்துக் கூறப்படுகிறது. இதன் வழியே அணி உலா அரங்கின் கலைப் புலமைத்துவக்கூறுகள் இந்து மதத்தில் சடங்காட்டங்களுள்ளும் நிகழ்வுகளினுள்ளும் அமைக்கப்பட்டுள்ள முறைமை தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.
  3. முன்வைப்புகள்
    4.1 பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயமும் அதன் சடங்காற்றுகைகளும்:
    கி.பி 1540களில் மட்டக்களப்பை எதிர்மன்னசிங்கன் மன்னன் ஆட்சி செய்தான். கலிபிறந்து 4640 காலப்பகுதி என்று மட்டக்களப்பு மான்மியம் இதனை அறுதியிடும். (F.X.C நடராசா, 1962),(கவிக்கோ வெல்லவூர்க் கோபால், 2016) இக்காலப்பகுதியில் வடஇந்தியாவின் கொங்கு நாட்டிலிருந்து மகாபாரதக் கலாசாரத்தை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்கில் இங்கு வருகை தந்த தாதன் எனும் மாமுனிவரின் வழிகாட்டுதலில் பாண்டவரின் உறுப்புகளை உள்வாங்கி மக்களுக்கு மகாபாரத கலாசாரத்தினைப் போதிக்கும் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்மன்னசிங்கன் மன்னன் இணங்கினான்.

அரசனும் தாதனும் ஏனையோரும் திருக்கோவில் ஆலயத்திலிருந்து கடலோரமாக வடக்கு நோக்கி வரும்போது கடலருகே ஆலஞ் சோலையும் கொக்குநெட்டி மரங்களும் நிறைந்த தெய்வீக இடத்தைக் கண்டு அதன் மேற்கே வனவாசத்திற்குரிய காடுகளையும் கண்டு அவ்விடத்தில் ஆலயம் அமைத்தான் (F.X.C நடராசா, 1962) என மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

“……………………………. எதிர்மன்னசிங்கன் மனமகிழ்ந்து
பார்த்தவர்கள் கொண்டாடப் பாரதத்தில் சொன்னபடி
கம்பம் வனவாசம் கடல்குளித்துத் தீய்ப்பாய்தல்
அம்புவில்லுத் தண்டுடனே ஐவர் கொலுவாக்கி வைத்து
ஆடலோடு பாடி ஆதி துரோபதிக்கு
மாடமுயர் கோவில் வரிசையுடனியற்றி
கும்பிட்டார் தெண்டனிட்டார் குவலயத்தைக் காருமென்றார்
தம்பட்டசல்லாரி தாரைசின்னஞ் சங்குதொனி
உடுக்கு சிலம்பு மணி ஒளிதங்கு தீபமெழ
அடுக்கு முறையோ டரவான் களப்பலியும்
பத்ததி போற்காட்டிப் பணிக்கன் குலத்தோர்க்கு
உற்ற புகழ்மேவ உங்களுக்கே முன்னீடு”

எனும் தாதன் கல்வெட்டு (F.X.C நடராசா, 1962) சிறப்பாக இதனை எடுத்துக் கூறும்.

இவ்வாலயச் செயற்பாடுகள் இன்றுவரை இப்பிரதேச மக்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்து, சடங்காற்றுகையுடனான வழிபாட்டு முறைகளை தன்னகப்படுத்தி மக்களின் நம்பிக்கையுடனான வழிபாட்டுக் கூறாக நிலைத்து நிற்கிறது. அநீதிக்கு எதிராகக் கொதிந்தெழுந்த திரௌபதை இதிகாச நாயகி என்ற நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகிறாள். மக்கள் பக்தி கொண்டு வணங்கும் சக்தியின் வடிவமாகிறாள்.

பாண்டிருப்புத் திரௌபதி அம்மன் ஆலயச் சடங்குகளில் முதன்மை மிக்க நாட்களாக காணப்படுபவை அதன் நிறைவு மூன்று நாட்களான வனவாசம், தவநிலை, தீப்பள்ளயம் ஆகியவையாகும். இந்த மூன்று நிகழ்வுகளும் பாரதப் போரின் முக்கிய கதையுறுப்புகளை நிகழ்த்திக் காட்டுவனவாக அமைவன. இதில் தவநிலை அருட்சுனன் சிவபெருமானை நோக்கி பாசுபதம் பெறுவதற்காக ஆற்றிய கடும் தவத்தினைக் காண்பிக்கின்றது. பல்வேறு தடைகளைத் தாண்டியும் இலக்கு மாறாத தவத்தின் உச்சமாகவும் அருட்சுனன் தவநிலை கொள்ளப்படுகின்றது. ஏலகண்ணி மறித்தல், பேருண்டி மறித்தல், பன்றி மறித்தல் எனப் பல்வேறு இடையூறுகள் வருகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, சிவபெருமான் வேடுவனாக வந்து தவத்தினைச் சோதிக்கின்றார். (முத்துத்தம்பிப்பிள்ளை ஆ, 1931) இறுதியில் பாசுபதம் பெறும் நேர்வைச் செய்துகாட்டும் நிகழ்வாக பின்னிரவு தாண்டிய வேளையில் தவநிலை நடந்தேறுகின்றது. இவை அனைத்தும் இதிகாசக் கதையை முழுமையான அரங்கச் செயற்பாடாக முன்வைக்கும் நிகழ்வுகளாக அமைகின்றன. ஆயிரக்கணக்கிலான மக்கள் ஆலய முன்றலில் கண் விழித்திருந்து இறை நம்பிக்கையுடன் இதனைத் தரிசிப்பர்.

மறு நாளான பதினெட்டாம் நாள் தீப்பள்ளயம். ஒரே நாளில் 18 தடவைகள் கட்டு நிறுத்தல் மேற்கொள்ளப்பட்டு, வழிபாடாற்றப்படும். பிற்பகலில் மஞ்சள் குளித்தல், தீ மிதித்தல் என்பன நிகழும். வேறு மார்க்கமின்றி இனி யுத்தந்தான் முடிவாகும் என்ற நிலையில் நிகழ்ந்த குருச்சேத்திரம் போரின் முடிவில் “தர்மம் மறுபடியும் வென்றதாக” ஐவர் கொலு யாகத்தீயில் புகுந்து வெளிப்பட்டு அஸ்தினாபுரத்தில் மீண்டும் முடிசூட்டுகின்றனர் எனும் முடிவு அது. இந்த நிகழ்த்துகை மூலம் மக்கள் மனதில் நீதி என்றொருநாள் வெற்றிகொள்ளும் எனும் நம்பிக்கை நிலை நிறுத்தப்படுகின்றது.

திரௌபதி அம்மன் ஆலயச் சடங்கு விளக்குகின்ற சடங்காடல் யாவுமே ஒரு கரு நகர்வு கொண்ட நிகழ்த்துகையாக நிகழ்த்தப்படுகின்றது. இதில் வனவாசம் ஒரு முழுமையான உலா அரங்க நிகழ்த்துகையாக மேம்பட்டு நிற்கின்றது என்பது ஆழ்ந்து ஆராயப்பட வேண்டியதாகும்.

பகடையாட்டத்தில் தோற்றுப் போன தர்மர் ஆதியோர் ஏற்றுக் கொண்டபடி 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். அடுத்துவரும் 13 ஆம் ஆண்டு யாரும் காணாதபடி மறைந்து வாழ வேண்டும். காட்டுவாழ்க்கையின் பல்வேறு பரிமானக் கூறுகளையும் காட்டுவதாகவும் மத்சய (விராட) தேசத்தில் மறைந்து வாழ்ந்ததைச் சுட்டுவதாகவும் இந்த வனவாசம், அஞ்சாதவாசம் என்பன அமைகின்றன. (முத்துத்தம்பிப்பிள்ளை ஆ, 1931)

4.2 அணிஉலா அரங்கும் பாண்டிருப்பு வனவாசமும் :

அணி உலா அரங்கு அல்லது பவனி அரங்கு (Processional Theatre) என்பது ஸ்பெயின் நாட்டினைத் தளமாகக் கொண்டு 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற ஒரு சமயச்சடங்கு சார் அரங்கமாகவே ஆய்வாளர்கள் காட்டுவர். மேற்கத்தேயத்தில் காணப்பட்ட மத்திய காலத்துக்குரிய (Medieval) அரங்காக இது வகைப்படுத்தப்படுகிறது (Ketie Notington, 2013). அது பிற்காலத்தில் ஸ்பெயினிலிருந்து போர்த்துக்கல் ஊடாக ஜெர்மனி வரைப்பரவியது. அடிப்படையில் வெளியூடாக இயங்கும் தன்மை கொண்ட ஆற்றுகை என இது விவரிக்கப்படுகிறது. இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இறுக்கமான கட்டமைப்புகள் காணப்படவில்லை. ஆயினும், குறியீட்டுத் தன்மை மற்றும் விழா சார்ந்த தனித்துவம் காரணமாக சராசரியான உலா செல்வதில் இருந்து இது வேறுபட்டு நிற்கிறது. இதற்கு மேலதிகமாக காட்சியமைப்பு, ஆடை அலங்காரம், இசை, தனித்துவமான அசைவொழுங்கு என்பவற்றைக் கொண்டிருக்கும். சமூகத்திற்குக் கூறப்படவேண்டிய முக்கிய செய்தி ஒன்றை குறியீட்டு நிகழ்வாக இது காட்டி நிற்கும். ஏற்கனவே திட்டம் செய்யப்பட்ட பாதை வழியே அதற்குரிய மாறுபட்ட நடிபங்குகளுடன் நகர்வதாக இருக்கும். நகர்வு தரித்திருத்தல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியிருக்கும் இயல்பு இதன் தலயாத்திரைக்குரிய பண்பு என்பர் ( Barbara and Brooks, 1985).

ஜெர்மானிய சமய நிகழ்த்துகைகளில் மத்திய காலத்தின் பிற்கூறுகளில் அதாவது, பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி பகுதிகளிலேயே அணி உலா அரங்கு முக்கியத்துவமுடையதாயிருந்தது ( Neil. C. Brooks, 1933).

அரங்கியல் வரலாற்று ஆய்வாளரான டேவிட் வில்ஸ் (David Wiles) அணிஉலா அரங்கு நான்கு செயற்பாட்டுக் கூறுகளைக் கொண்டமைவதாக விவரிப்பார். அவை, தலயாத்தரை(pilgrimage), அணி ஊர்வலம் (parade), பண்பாட்டுப் பொருந்துகை(Cultural mapping), மற்றும் கதைகூறல்(narrative) என்பனவாகும். இவற்றில் ஒன்று அல்லது பல செயற்பாட்டுக் காரணிகளைக் கொண்டதாகக் காணப்படும் அணி உலா அரங்க நிகழ்த்துகைகளையும் அவர் உதாரணங்காட்டுவார். போர்த்துக்கல்லின் நகரத் தேவாலயமான சயோ கிளமென்ட்டிலிருந்து வீதி வலமாக கன்னி மாதாவின் திருச்சொரூபம் மலையிலுள்ள சயோ பிரன்சிஸ்கோ தேவாலயத்திற்கு பவனியாக கொண்டுவரப்படுவதையும் அதன் கூறுகளையும் (David Wiles, 2003) டேவிட் வில்ஸ் விளக்குவார்.

பாண்டிருப்பு வனவாசம் இந்த நான்கு செயற்பாட்டுக் கூறுகளையும் ஒருங்கே காட்டுவனவாக அமைவது அரங்கியல் ஆய்வாளர்கள் மிக ஆழமாக நோக்கவேண்டியவொன்றாகும். அணிஉலா அரங்கு கொண்டிருக்கக்கூடிய அனைத்துக் கூறுகளையும் பாண்டிருப்பு வனவாசம் ஒரே நிகழ்த்துகையில் கொண்டமைகிறது. சடங்கு சார்ந்த பக்தி பூர்வமான இந்த நிகழ்த்துகை பகுதியளவு பங்குபற்றுகை அரங்காகவும் காணப்படுகின்றது. அதாவது, மைய நடிபங்கு வகிக்கும் கொலுவுடன் பார்வையாளரும் ஆற்றுகையில் பங்குபற்றுநராகக் கட்டுப் பாடின்றி இணைதலும் தவிர்த்தலும் சாத்தியமாவதே அது. பாபரா மற்றும் புறூக்ஸ் குறிப்பிடுவது போல இறுக்கமான கட்டுபாடுகள் அற்ற வெளியூடான இயங்குநிலை கொண்ட நிகழ்த்துகையாக வனவாசம் காணப்படுகின்றது. தனித்துவமான காட்சியமைப்பு, ஆடை அலங்காரம், இசை, அசைவொழுங்கு என்பவற்றைக் கொண்டிருப்பதும் மையக்கருவான செய்தியொன்றை குறியீடாக உணர்த்தி நிற்பதும் தனித்துவமான திட்டம் செய்யப்பட்ட பாதையூடாக நகர்வதும் முதலான அணி உலா அரங்குக்குரிய சிறப்பியல்புகளை வனவாசம் கொண்டமைந்துள்ளது.

காவடி எடுப்போர், தீச்சட்டி தூக்குவோர், வாயலகு போடுவோர் என ஆயிரக்கணக்கானோர் புடை சூழ தேவாதிகளோடு உற்சவத்தின் 16ஆம் நாள் பயணிக்கும் பாண்டவர் கொலு மகாபாரதம் கூறும் வனவாசத்தை நிகழ்த்தும்.(மௌனகுரு சி, 1998) அயல் கிராமங்களினூடாக தோராயமாக 7–7 1/2 கிலோமீற்றர் பயணிக்கும் வனவாசம் ஒரு உச்சமான உலா நிகழ்த்துகையாகக் (Processional Performance) கொள்ளக்கூடியது. (சஞ்சீவி சிவகுமார், 2017) பாண்டவர் கொலு தருமர், பீமன், திரௌபதி, அருட்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரைக் கொண்ட வரிசையாகும். இவ்வரிசையில் முன்னே கிருஷ்ணர் தலைமை தாங்கி செல்வார்.

ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கும் பாண்டவர் கொலுவின் வனவாசம் பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, மணல்சேனை, சேனைக்குடியிருப்பு, உப்புத்தண்ணிக் கட்டு வயல்பகுதி, பெரிய குளக்கட்டு, ஆகியவற்றினூடு செல்லும். காவடிகள், கற்பூரச் சட்டிகள், கரகங்கள் புடைசூழ பக்தர்கள் திரள் திரளாக அணி கூட்ட இந்தப் பவனி நிகழும்.

இங்கு டேவிட் வெல்ஸ் கூறுகின்ற தலயாத்திரை, ஊர்வலம், பண்பாட்டுப் பொருந்துகை, கதை கூறல் அல்லது படிப்பினை என்பவற்றில் ஒன்றோ பலதோ ஒரு உலா அரங்கின் செயற்பாட்டுக் காரணமாக அமைதல் என்பதற்கு மேலாக ஒரே சடங்கு நிகழ்த்துகை இந்த நான்கு கூறுகளையும் உள்ளடக்கியதாக முழமையான ஒரு உலா அரங்காக அமைவதை நோக்கலாம்.

உரு: வனவாசம் செல்லும் பாதை (மூலம்: Adopted from Google map)

4.2.1 தலயாத்திரை(Pilgrimage)

அணி உலா அரங்கில் முதலாவது செயற்பாட்டுக் கூறாக கூறப்படும் தலயாத்திரை வனவாசத்தில் முக்கிய மிக்கதாகும். தல யாத்திரை பயணித்தல் மற்றும் தரித்தல் ஆகிய இரு கூறுகளைக் கொண்டது என காட்டுவார் (Barbara and Brooks> 1985) பாபரா மற்றும் புறூக்ஸ்.

ஐவர் கொலு மற்றும் பரிவாரங்கள் பல்வேறு ஆலயங்களிலும் தரித்து செல்வதும் இங்கு இடம் பெறும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தனித்துவமிக்க நிகழ்வு இடம் பெறுவதுண்டு. திரௌபதி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும் ஐவர் கொலு வாள் மாற்றும் சந்தியில் (ஆலய வீதி பாண்டிருப்பு பிரதான வீதியும் சந்திக்கும் இடம்) சடங்கு நிகழ்வு ஒன்றினை மேற்கொள்ளும். அதில் தருமர் தம்பி வீமனிடம் நிபந்தனையுடன் வாளை ஒப்படைப்பார். உணவுக்காக இலை, குழை, காய், கனிகளை மட்டும் பறிக்க வேண்டும். எந்தவொரு விலங்குக்கும் துன்பம் நேரக் கூடாது என்பது அந்த நிபந்தனை. வாளைப் பெற்றுக் கொண்டதும் வீமன் முதலாவதாக அரசடி அம்மன் ஆலயத்தின் அரச மரத்தில் காணப்படும் முல்லை, முசுட்டை, காரை, கானாந்தி, பிரண்டை ஆகியவற்றை பறிப்பார். இவை மோட்ச இலைகள் எனப்படுகின்றன. யுத்தமொன்றில் நல்லவர்களும் இழக்க நேரிடும் என்ற குறியீட்டை அது விளக்குகிறது.

மக்கள் வழிநெடுகிலும் ஐவர் கொலுவை வரவேற்று ஆசி பெறுவர். மக்களுக்கு நெற்றியில் ‘பண்டாரம்’ எனப்படும் பிரசாதம் இட்டு தர்மர் ஆசி வழங்குவார். நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் பாண்டவர் தாம் கூடவே கொண்டுவந்த கட்டுச்சோற்றினை கொண்டு பந்தியிருப்பர். பசியாறுவதாகப் பாவனை செய்வர். பின் அது குடிவழி கூறப்பட்டு பகரப்படும். வீமன் தனது வாளினால் எதிர்ப்படும் காய்கறிகளை பறித்துக் கொண்டு செல்வார். அதைத் தாண்டி சேனைக்குடியிருப்பு செல்லப்பிள்ளையார் ஆலயத்தை அடையும் ஐவர் கொலு தாம்பூலம் தரித்து தமது ஆயுதங்களை வன்னி மரப்பொந்தில் மறைத்து வைப்பது குறியீடாக நிகழ்த்தப்படும் பின்னர் உப்புத் தண்ணிக்கட்டு எனும் வயல் பகுதியினூடாக செல்லும்போது எந்தவொரு சந்தடியுமின்றி பயணிப்பர். இதன் போது தாரை, தப்பட்டை, மேளம், மணி, சங்கு எந்த இசையும் இன்றி அமைதியாக பயணம் தொடரும். இது மட்சய தேசத்தில் மேற்கொண்ட அஞ்ஞாதவாசத்தைக் குறிப்பதாகும். பின் அங்கிருந்து ஐவர்கொலு ஆலயத்தினைச் சென்றடையும். இறுதியாக படையுறக்கம் ஆலயத்தில் நிகழும்.

அயல் கிராமங்களிலுள்ள பல ஆலயங்களுக்கு ஐவர் கொலு யாத்திரை செய்வதும், இறை வணக்கத்தில் ஈடுபடுவதும், அங்கு பந்தியிருந்து பசியாறுவதும், அந்த அன்னத்தை மக்களுக்கு பிரசாதமாக வழங்குவதும் எனப் பல ஆலயங்களை இணைக்கும் ஒரு தல யாத்திரையாக அமைகின்றது.

4.2.2 அணி ஊர்வலம் (Parade)

பாண்டவர் அணியின் ஊர்வலம் சிறப்புமிக்க ஒரு கொலு வரிசையாக பல்வேறு அலங்காரங்களுடன் இதிகாச நாயகர்களின் தனிப்பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். தர்மத்தின் அடையாளமாக உதிஸ்டிரன்(தர்மர்); புஜ பராக்கிரமத்தின் குறியீடாக நிற்கும் வீமன்; வில்வீரனான அருட்சுனன்; சாத்திர சம்பிரதாயங்களின் பேணலுடனான நகுல சகாதேவர்கள்; ஐவரின் பத்தினியான திரௌபதி. இப்படி அமையும் பாண்டவர் வரிசையுடன் முன்னே கிருஷ்ணர் சங்கு சக்கரம் என்பவற்றை ஏந்திச் செல்ல ஏனைய தேவாதியோரின் வரிசை என்பன இவற்றை அணிசெய்யும்.
தாரை, தப்பட்டை , உடுக்கை, மேளம், சங்கு, சல்லாரி, மணி என இசைக்கருவிகள் இசைக்கும். தீச்சட்டி, காவடி, கரகம், எனப் பல்வேறு வரிசைகள் உடன் செல்லும். இது ஒரு திட்டமிட்ட ஊர்வல அணியாக இருக்கும். வெவ்வேறு தனித்துவமிக்க பண்புகளை வெளிப்படுத்தும் இயல்புகளுடனும் ஆடை அணிகளுடனும் செயற்பாடுகளுடனும் ஒரே அணியாக வனவாச அணி நகரும்.

4.2.3 பண்பாட்டுப் பொருந்துகை (Cultural mapping)

உலா அரங்கின் மூன்றாவது செயற்பாட்டுக் கூறான பண்பாட்டுப் பொருந்துகை மேலைத்தேயத்தில் பின்வந்த காலங்களில் அவர்களின் நகர அமைப்பு, கட்டட முறைமை ஆகியவற்றையே அதிகம் பேணிக் கொண்டன. ஆனால் கல்முனையில் ஏற்கனவே வேரூன்றிக் காணப்படும் குடிவழி முறைமைகள், குலக் கட்டமைப்பு, சமூக நிலப் பண்பாடுகளுக்குப் பொருந்துவனவாக அமையும் நிகழ்வுக் கட்டமைப்பு ஆகியவற்றைக் காட்டுவனவாக இன்றுவரை காணப்படுகின்றது.

வனவாசத்தின்போது துரௌபதி சுமந்துவரும் கட்டுச்சோறு நற்பட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாண்டவர்களுக்கு பரிமாறப்பட்டு அப் பங்குகள் ஏழும் ஏழு குடியினருக்கு வரிசை கூறி வழங்கப்படுகிறது. இதில் தருமரின் பங்கு கோயில் பூசகருக்கும் வீமரின் பங்கு கோயில் தலைவருக்கும், திரௌபதியின் பங்கு கோயில் செயலாளருக்கும் அர்ஜுனரின் பங்கு வண்ணக்கருக்கும், நகுலனின் பங்கு உடையார்க்கும் சகாதேவனின் பங்கு பணிக்கர் குடிக்கும், கிருஷ்ணரின் பங்கு ஊர்ப் போடிக்கும் வழங்கப்படுகிறது. இங்கு குடிவழி பெயர் கூறப்பட்டு வழங்கப்படுவது நோக்கப்பாலது. ஆலயத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் குடிவழி முதுசத்தை பின்பற்றி இந்த வரிசை பேணப்படுகின்றது.(நற்பிட்டிமுனை கணேசராலய கூட்டக் குறிப்புகள்). நில கட்டமைப்புக்கு ஏற்ப மக்களின் குடியடர்த்தி குறைந்த பகுதி அஞ்சாத வாசம் செய்யும் பகுதியாக கடைப்பிடிக்கப்படுகிறது ஏற்கனவே வேரூன்றிய பண்பாட்டுப் போக்குகளுடன் பொருந்தும் வகையில் இவை கட்டமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். இப்பிரதேசத்தின் சாதிக் கட்டமைப்பு, குடிவழி முறைமை என்பவற்றைத் தன்னிலைப்படுத்தி காணப்படும் பண்பாட்டுப் பொருந்துகை இங்கு மனங்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

4.2.4 கதை கூறல்/படிப்பினை(Narrative):

டேவிட் வெல்ஸ் காட்டும் உலா அரங்கின் நான்காவது செயற்பாட்டுக் கூறான கதை கூறல் அல்லது படிப்பினை உலா அரங்கின் முக்கியமிக்க கூறாகும். வனவாச நிகழ்வின் படிப்பினை பல்வேறு தடைகளையும் தாண்டி “தர்மம் மறுபடியும் வெல்லும்” என்ற செய்தியைத் தாங்கி விரிகின்றது. தீயவர்களின் வன்மங்களுக்கும் கொடுமைகளுக்;கும் எதிராக எடுக்கப்படும் சபதம்; ஆழ்ந்த பக்தி மூலம் தருமம் நிலை நாட்டப்படுவது என யுகங்கடந்து நிலைத்து நிற்கும் இதிகாசம் மக்களின் பக்திப் பிரவாகத்துடன் நிகழ்த்தப்படும் முறைமையாகவும் இதனைப் பார்க்கலாம்.
வாழ்க்கையின் கடினப்பகுதியைத் தாங்கி கொண்டுகடத்தலும், நீதி ஒரு நாள் வெல்லும் என்பதும் இந்த வனவாசத்தின் ஒட்டுமொத்தப் படிப்பினை ஆகும்.

  1. வனவாசம் நிகழ்வும் இறையியல் சிந்தனைகள் நிலைநிறுத்தப்படலும்
    திரௌபதி அம்மன் ஆலய விழாக் காலத்தில் இப்பகுதி மக்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட இறை சிந்தனையில் அருட்டப்பட்டவர்களாக அவதானிக்க முடியும். விரதமிருத்தல், புலால் மறுத்தல், ஆலயத்தில் தம் நேரத்தைச் செலவிடுதல், பாரதக் கதை பாராயணத்தில் ஈடுபடுதல், என்பவற்றைக் காணக்கூடியதாக இருக்கும். தர்மத்தின் வழி நடந்தவர்களையும், நீதியைக் காக்க அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்தவர்களையும் வணங்குதற்குரியவர்களாகப் போற்றுவதுமான சங்கமர் வழிபாடாகவும் இதனை நோக்கலாம். அநீதியை எதிர்த்த திரௌபதி நீதி வழி வழுவாத தர்மனாதியோர் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகின்றார்கள். மனிதனும் தெய்வமாகலாம் எனும் தத்துவப் பொருளையும் இது கொடுக்கும்.

தர்மரிடம் ஆசி பெறுதல், காப்பு நூல் கட்டுதல், பண்டாரம் சாத்துதல், என இறையியல் நம்பிக்கையின் உயர்வான பண்புகளையும் மக்களிடம் காண முடியும். பக்தி மயப்பட்ட நம்பிக்கையின் அடையாளமாக காவடி எடுத்தல், வாயலகு போடுதல், திரௌபதிக்கு நேர்த்தி செய்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், முதலான வழிபாட்டு முறைகளும் மக்களிடம் ஈடுபாட்டுடன் முன்னெடுக்கப்ப்படுவதையும் பக்திப் பேரொலியுடன் இறை நாமம் உச்சரிக்கப்படுவதையும் கண்டுணரலாம்.

  1. வனவாசம் நிகழ்வில் கலைப் புலமைத்துவக்கூறுகள்; கட்டமைக்கப்படுதல்
    வனவாசம் நிகழ்வு பல்வேறு கிராமங்களை ஒன்றிணைத்து கலைப் புலமைத்துவச் செயற்பாடுகளை நிலைநிறுத்துகின்றது. வனவாச நிகழ்வுக்காக அது பயணம் செய்யும் பாதை முழுவதும் பிரமாண்டமான அலங்கார வளைவுகள், சோடணைகள், பதாதைகள் என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அழகு இரனைமிக்க காட்சிப்படுத்தல்களும், சித்திரங்களும் தாங்கிய அலங்காரங்களைக் கண்ணுறலாம்.

பாண்டவர் கொலுவும் பின்தொடரும் தேவாதிகளும் தமக்கே உரிய ஆடை, ஆபரண அலங்காரங்களைக் கொண்டிருப்பர். பாத்திரத்திற்கேற்ப முடிதரித்தல், தனித்துவமான ஆயுதங்களை கொண்டிருத்தல் என்பவற்றைக் காணலாம். எடுத்துக்காட்டாக: கிருஷ்ணர் – சங்கு, சக்கரம்;;;; மயில் இறகு கொண்ட முடி, வீமன் காதாயுதம்; அருச்சுனன் வில் அம்பு.

காவடிகள் வெவ்வேறுபட்ட அலங்கார வடிவுகளிலும் வகைகளிலும் கட்டமைக்கப்பட்டிருப்பதுடன் தூக்குக் காவடிக் கோல், பாய்ச்சப்படும் முள், கட்டப்படும் சேணம் என்பனவும் தனித்துவமிக்க கலைப் பாரம்பரியம் கொண்ட நிருமானங்களாகும். தனித்துவமான கலைப்பொருள் பண்பையும் ஓவிய மரபையும் இதில் தரிசிக்க முடியும்.

பாண்டிருப்பு வனவாச நிகழ்வின் போது, தாரை, தப்பட்டை , உடுக்கை, மேளம், சங்கு, சல்லாரி, மணி எனப் பல்வேறு இசைக் கருவிகள் ஒருக்கே முழங்குகின்றன. காவடிகளின் ஆட்டம், அதற்குரிய தாளக்கட்டு, வனவாசக் கொலுவில் ஒவ்வொருவருக்குமான பாத்திர நடிபங்குக்குரிய அசைவுகள் கலைபூர்வமாகக் காணப்படும். இவ்வாறு பல்வேறு கலைப்புலமைத்துவக் கூறுகளை தன்னகத்தே உள்வாங்கியதாகக் காணப்படும் தன்மையை வனவாச நிகழ்வில் கண்டுணர முடிகின்றது.

  1. முடிவு

அணிஉலா அரங்கு கொள்ளக் கூடிய செயற்பாட்டுக் காரணிகளான தலயாத்தரை, அணி ஊர்வலம், பண்பாட்டுப் பொருந்துகை, மற்றும் கதைகூறல் ஃபடிப்பினை அனைத்தையும் சிறப்புறக் கொண்டமையும் ஒரு அரங்கச் செயற்பாடாக வனவாசம் கட்டமைக்கப்பட்டுள்ளமை வியப்பளிக்கும் விடயமாகும். உலா அரங்கின் பிறப்பிடமாகக்; கொள்ளப்படும் ஸ்பெயின் நாட்டில் ஊற்றுப்பெற்ற அணி உலா அரங்கு பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் ஜெர்மனியை வந்தடைகிறது எனக் காண்கிறோம். ஏறக்குறைய அதே காலப் பகுதியில் ஈழத்திலும் அது விருத்திபெற்றுள்ளது. பாண்டிருப்பு வனவாசம் தொடர் சடங்காக ஆலயத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டும் வருகின்றது. தவநிலை, தீமிதித்தல் எனும் பல்வேறு சடங்காட்டங்களைத் தாண்டி வனவாசம் தனித்துவமான அணிஉலா அரங்காகத் தெரிகிறது. ஈழத்து இந்துக்களிடையே ஒரு ஆழமிக்க அணிஉலா அரங்கச் செயற்பாடு வேரூன்றிக் காணப்பட்டமைக்கு இன்னும் தொடரும் வனவாசம் மிகமுக்கிய சான்றாதாரமாகும்.இந்து மதத்தின் இறையியல் சிந்தனையின் மூலமான இறை அவதாரம் தர்மத்துக்கு என்றும் துணை நிற்பதும் தர்மம் வெல்லும் என்ற உறுதியையும் வனவாசம் உணர்த்துகின்றது. மக்களின் உணர்வுபூர்வமான பக்தி ஈடுபாடு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வனவாசம் நிகழ்வு எனும் அணிஉலா அரங்கச் சடங்காற்றுகையின் ஊடாக அமைவது கொண்டு இந்து மதத்தின் இறையியல் சிந்தனைகளில்; இதன் முக்கியத்துவத்தை அறியலாம். இந்துக்களின் கலைப் புலமைத்துவக்கூறுகளினூடாக பக்தி கட்டமைக்கப்பட்டு நிலை நிறுத்தப்படுவதை விளக்குவதற்கான முக்கிய புள்ளியாக அணிஉலா அரங்கைக் கொள்ளலாம்.

உசாத்துணை:

  1. 1. Barbara Kirshenblate-Gimblett and Brooks McNamara, “Processional Performance: An Introduction, The Drama Review, Autumn,1985, Vol. 29, No.3
  2. David Wiles, A short History of Western Performance space, Cambridge University Press, New York> 2003
  3. Ketie Notington, “Medieval English Drama”, John Wiley & sons, 2013
  4. Niel C. brooks,“ Processional Drama and Dramatic Procession in Germany and the late Middle Age ” The Journal of English and Germanic Philology, Apr. 1933, Vol. 32, No. 2 pp 141-171
  5. Pratima Bowes,“ Hindu Intellectual tradition”, Allied Publishers Private Limited, New Delhi, 1978, pp vii+218.
  6. Varad Pande,M.L, Manohar Laxman Varadpand, “History of Indian Theatre”, Volume 1
  7. F.X.C நடராசா,மட்டக்களப்பு மான்மிகம், முதல் பதிப்பு 1962, மட்டக்களப்பு
  8. கவிக்கோ வெல்லவூர்க் கோபால் (2016),மட்டக்களப்புத் தேசம் – வரலாறும் வழக்காறும், சேமமடு பதிப்பகம், கொழும்பு.
  9. கோபாலகிருஷ்ண ஐயர்(1992), இந்துப் பண்பாட்டு மரபுகள், வித்தியா வெளியீடு, 1992
  10. கார்த்திகேசு சிவத்தம்பி,“யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு”,சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு, நுகேகொடை 1995
  11. கமலநாதன், கமலா கமலநாதன்மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்,மட்டக்களப்பு
  12. சஞ்சீவி சிவகுமார் , “பாண்டிருப்பு வனவாசம்- உச்சமான உலா அரங்கு”, பிரதேச செயலகக் கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம கல்முனை 2017
  13. முத்துத்தம்பிப்பிள்ளை ஆ, பாரதச் சுருக்கம், நாவலர் அச்சுக்கூடம், 1931
  14. மௌனகுரு சி,“மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்”, விபுலம் வெளியீடு, 1998, மட்டக்களப்பு
  15. நற்பிட்டிமுனை கணேசராலய கூட்டக் குறிப்புகள் 1955 – 2000, நற்பிட்டிமுனை