மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட உதை பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட 20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டிகள் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மற்றும் காரைதீவு விளையாட்டு மைதானத்தில் கடந்த (5,6,7) தினங்களாக நடைபெற்று வந்தது.  28 பாடசாலை அணிகள் பங்குபற்றிய  இப் போட்டிகளில்  மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி,  மட்டக்களப்பு பட்டிருப்பு வலயம் மண்டூர் மகா வித்தியாலயத்துடனான காலிறுதி போட்டியில் (2:0) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியுடனான அரையிறுதி  போட்டியில் தண்டனை உதையில் தோல்வியை தழுவிக் கொண்டது.

இந்நிலையில் மூன்றாம் இடத்தினை தெரிவு செய்வதற்கான போட்டி  கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில்  இன்று (07)  இடம்பெற்றது. கிண்ணியா அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை, மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகிய இரு பாடசாலை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இப்போட்டி (01:01) என்ற சமநிலையோடு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இடம் பெற்ற தண்டனை உதையில், (05:03) என்று கோல்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20வயதுக்குட்பட்ட பாடசாலை உதைபந்தாட்ட அணியை பயிற்றுவித்து வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் எம்.ஜே.தாரிக் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களாக ஏ.சி.எம்.அஸ்லம், திருமதி எம்.ஏ.எம்.பஹ்மியா உட்பட பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான என்.ஜசாட் பௌலாட், எம்.ஏ.எம்.எஸ்.பஸ்றூன் ஆகியோருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், அபிமானிகள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.