காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே 4 மணி நேரங்களைக் கொண்ட இந்தப் படகு சேவை மே 15 ஆம் திகதியளவில் ஆரம்பமாகும். காரைக்கால் துறைமுகத்தின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் கப்பல் சேவையில் பணியாற்றவுள்ள கப்பல் கப்டன் மற்றும் ஆறு பணியாளர்கள் அனைவரும் இந்தியர்களாவர். கப்பல் சேவை இந்தியக் கொடியின் கீழ் நடத்தப்படும். சேவையில் ஈடுபடவுள்ள கப்பல் சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் தர நிர்ணயங்களைக் கொண்டது எனவும் நந்தகோபன் குறிப்பிட்டார்.
50 அமெரிக்க டொலர் மற்றும் வரி
பயணிகள் கப்பல் சேவை கட்டணமாக 50 அமெரிக்க டொலர் மற்றும் வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 120 முதல் 150 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் தலா 100 கிலோ பொருட்களைக் கொண்டு செல்ல முடியும்.
இந்தப் படகில் பயணிகளுக்கான உணவகம் ஒன்றும் இயங்கும். கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு முதல் மூன்று மாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, படகு சேவையை தொடங்குவதற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. படகு சேவையை தொடங்குவது இந்தியாவே என இலங்கைதுறை முகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சி டி ல்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கப்பல் சேவையை தொடங்குவதற்கு ஏதுவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் சுங்கம், குடிவரவு திணைக்களம் ஆகியவற்றுக்குத் தேவையான கட்டங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன.
பயணிகள் தங்குவதற்கு வசதியாக துறை முகம் மேம்படுத்தப்படுகிறது. இவற்றுக்காக இலங்கை அரசு 150 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 14. கூறியுள்ளார்.
விசேட சொகுசு தொடருந்து சேவை
காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை இயக்கப்படும் நிலையில் கப்பல் சேவையை பயன்படுத்துவோர் வசதி கருதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட சொகுசு தொடருந்து சேவை இடம் பெறும். பௌத்த யாத்ரீகர்கள் கூட படகில் இந்தியாவுக்குச் சென்று புத்த கயாவை சென்றடைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
காங்கேசன்துறை – காரைக்கால் இடையேயான இந்த படகு சேவையை இயக்குவது குறித்த திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உதித்தது. இப்போதே அது சாத்தியமாகவுள்ளது.
முதலில் சிதம்பரம் உள்ளிட்ட இந்துக் கோவில்களை தரிசிக்க யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு இந்து பக்தர்களை அழைத்துச் செல்வதற்கான திட்டங்களை வகுக்கப்பட்டன.
எனினும் விசேட சேவைகளை நடத்துவது அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். எனவே தான் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே நிரந்தர கப்பல் சேவையை நிறுவ நான் முன்மொழிந்தேன் என நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
8 மணி நேரத்தில் சென்னை
இந்தக் கப்பல் சேவைக்காக இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணம் வருவோர் தங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் ஏராளமான விடுதிகள் உள்ளன. யாழ்.நகரில் இருந்து காங்கேசன்துறைக்கு 20 நிமிடங்களில் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கையில் இருந்து கப்பலில் காரைக்கால் செல்வோர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு இரண்டு மணி நேரங்களில் செல்ல முடியும். சென்னைக்கு 8 மணி நேர பயணத்தில் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.