எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரையும் இணைத்துக்கொண்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.
ராஜாங்க அமைச்சர்கள் மட்டத்திலும் மாற்றம் மேற்கொள்ளவுள்ளாதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பலம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு கட்சியினரும் தற்போது கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
“அடுத்து வரும் இரண்டு வாரங்கள் இந்த நாட்டின் அரசியலில் மிக முக்கியமான கட்டங்களாகும். ஏனெனில் கட்சி தாவல்கள் அமைச்சர்கள் மாற்றங்கள் என பல விடயங்கள் ஏப்ரல் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறலாம். ஆனால், இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் பணியாற்றுவோம் என்ற நம்பிக்கை இல்லை.
நாட்டுக்கு நல்ல முடிவை யார் எடுத்தாலும், எதிர்க்கட்சிகள் ஏதாவது நல்லது செய்தால், அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.