கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கத் தடை;
மாநகர சபை தீர்மானம்
(செயிட் அஸ்லம்)
கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் 58ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு புதன்கிழமை (18) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது உரையாற்றிய அவர் கூறியதாவது;
கல்முனைப் பிரதேசத்தில் மரணிக்கின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களின் பூத்தவுடல்களை இங்குள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்து விட்டு, உரியவர்களின் நினைவாகவும் அடையாளப்படுத்துவதற்குமென அவர்களது குடும்பத்தினரால் கல்லறைகள் கட்டுப்படுகின்றன. இது எமது பாரம்பரிய மரபாக இருந்து வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக இதனைச் செய்வதற்கு அனுமதித்தால் இன்னும் சிறிது காலத்தில் இம்மயானத்தில் பூத்தவுடல்களை அடக்கம் செய்வதற்கு இடமில்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும்.
அதேவேளை, இப்பிரதேசத்தில் இன்னொரு புதிய மயானத்தை உருவாக்குவதற்கும் இடமில்லை என்கிற விடயத்தையும் சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இதனைக் கருத்தில் கொண்டே இம்மயானத்தில் அடக்கம் செய்யப்படுகின்ற பூத்தவுடல்களுக்கு கல்லறைகள் கட்டுவதைத் தவிர்த்து, அவற்றை அடையாளப்படுத்துவதற்கான பெயர் விபரங்களை ஒரு பலகையிலோ அல்லது கல்லிலோ எழுதி, நடுவதன் மூலம் எதிர்காலங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.
மாநகர சபையின் பொது வசதிகள் குழுவின் தவிசாளர் என்ற ரீதியில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, இப்பிரேரணையை இச்சபையில் சமர்ப்பித்திருக்கிறேன். இதனை ஹென்றி மகேந்திரன் கொண்டு வந்திருக்கிறேன் என்பதற்காக, அரசியல் காரணங்களுக்காக எவரும் எதிர்த்து விடாதீர்கள். இது நமது சமூகம் சார்ந்த, எதிர்கால சந்ததியினரின் நலன் சார்ந்த விடயம் என்பதை கவனத்தில் கொண்டு இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்குங்கள் என்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எஸ்.சந்திரசேகரம் இராஜன், எஸ்.குபேரன் ஆகியோரின் கருத்துகள் மற்றும் மாநகர முதல்வரின் ஆலோசனைகளையடுத்து குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.