தென்னிலங்கையில் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணபிக்க இறப்பு சான்றிதழ் விண்ணப்பங்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்காலை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்ததையடுத்து, இறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பதிவாளர் அலுவலகத்தில் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் இத்தீர்மானத்தை மேற்கொள்ள பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியதாக தங்காலை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த பிரச்சனை குறித்து திவாளர் நாயகம் திணைக்களத்தில் தெரிவித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் இந்த காகிதப்பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இதற்கு தீர்வாகவே இந்த தேவையற்ற விண்ணப்பப் படிவத்தை மீளாய்வு செய்து பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் விசாரணையின் போது, உதவிப் பதிவாளர் நாயகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், அவரது அலுவலகத்திற்கும் இந்த செய்தி பின்னர் தெரியவந்ததாக ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
தங்காலை பிரதேச செயலகத்தின் தன்னிச்சையான தீர்மானத்தின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனுமதி எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்தார்.
தற்போதும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் சுமார் 4 இலட்சம் விண்ணப்பப் படிவங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்காத காரணத்தினால் விண்ணப்பப் படிவங்கள் இல்லாமைக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்தும், இதுபோன்ற தவறான தகவல்களை அளித்தது குறித்தும் உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.