கார்மேல் பற்றிமா தொடர்ந்தும் முதலிடம்; ஆசிரியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படவேண்டும்! உதவிக் கல்வி பணிப்பாளர் சஞ்சீவன்
-/அரவி வேதநாயகம்
கல்முனை கல்வி வலயத்தில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கார்மேல் பற்றிமா கல்லூரி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இன்னிலை தொடர அதிபர், ஆசியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் கைகோர்க்கவேண்டுமென கல்லமுனை கல்வி வலையத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்சீவன் தெரிவித்தார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுகூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுகூட்டம் நேற்று (19) கல்லூரி முதல்வர் அருட்சகோ.எஸ்.சந்தியாகு (எப்.எஸ்.சீ) தலைமையில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 2021ம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கார்மேல் பற்றிமா கல்லூரி தொடர்ந்தும் எமது கல்வி வலயத்தில் முன்னிலை வகித்துவருகின்றது. அதேபோல் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தேசிய மட்ட பெறுபேறுகள் வரை பெற்றுவருகின்றது. இதற்கு இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசியர்களின் அர்ப்பணிப்புடனான சேவையுடன் பெற்றோர் மற்றும் பழையமாணவர்களின் ஒத்துழைப்பான செயற்பாடுகளே காரணம். தொடர்ந்தும் இப்பாடசாலை முன்னிலை பெறுவதற்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் உள்ளக விளையாட்டுகளை விருத்திசெய்வதன்மூலம் சர்வதேச அளவில் வெற்றிகளை குவிக்கவும் அதிபர், ஆசியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் கவனம் செலுத்தவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கல்லூரி முதல்வர் அருட்சகோ.சந்தியாகு தனதுரையில் தொடந்தும் தமது பாடசாலை முதல்னிலை பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பிரதி அதிபர்கள் மற்றும் ஆசியர்களுக்கும், பெற்றோர்கள், பழையமாணவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன் பழையமாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் வழங்கப்பட்ட பல்வேறுபட்ட சேவைகள், நன்கொடைகள் தொடர்பிலும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், தற்போது நாட்டில் இருக்கின்ற பொருளாத நெருக்கடி நிலையில் பல்வேறுபட்ட செயற்பாடுகள் பாடசாலையினால் மேற்கொள்ளப்படவேண்டியிருப்பதையும், செலவுகள் பன்மடங்காக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சரவணமுத்து தனதுரையில் வருடாவருடம் தவறாது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக்கூட்டம் இடம்பெறுவதையும் வெளிப்படைத் தன்மையுடன் கணக்கறிக்கை உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்குமான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுவது சிறப்பம்சமெனவும் அதிபர் உள்ளிட்ட அபிவிருத்தி சங்கக் குழுவினரை பாராட்டினார்.
இதன்போது கருத்துக்களை தெரிவித்த பெற்றோர் பாடசாலைக்கான தமது பங்களிப்புகள் தொடர்ந்தும் இருக்குமெனவும் புலம்பெயந்து வாழும், ஏனைய எமது பாடசாலை பழைய மாணவர்களின் நிதி மூலங்கள்மூலமான அபவிருத்தித்திட்டங்களை பெற்றுக்கொள்வதில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தனர்.