கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரவிலுள்ள பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை; முறையிட்டும் தீர்வில்லை!
-/கல்.

பெரியநீலாவணை மத்திய மருந்தகத்தில் இரண்டு மாதங்கள் அண்மிக்கின்ற நிலையிலும் நிரந்தர வைத்தியர் இன்றி சேவையை பெறமுடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இங்கு கடமையாற்றிய வைத்தியர் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக அறியமுடிகின்றபோதும் அதற்கான நிரந்தர மாற்று ஏற்பாடுகள் எதையும் இதுவரை கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொள்ளவில்லையென தெரியவருகின்றது.

பெரியநீலாவணை ஆரம்ப மருத்துவ பிரிவுக்கு ஆளணிக்கு மேலதிகமாக சிற்றூளியர்களை இணைத்துள்ள கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆளணியில் உள்ளவாறான நிரந்தர வைத்திய அதிகாரி நியமனத்தை இரண்டு மாதங்களாகியும் நிவர்த்திசெய்யாததுடன், இங்கு நிரந்தர நியமனம் பெற்றுள்ள மருந்தாளரை சுழற்சி முறையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடுத்துவதும் இந்த வைத்தியசாலை தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அக்கறையற்று செயற்படுவதையே காட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தை தொடர்பு கொண்டு கேட்போது, தாங்கள் பலமுறை இக்குறைபாடுகள் தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அப்போது நிரந்தர வைத்திய அதிகாரி நியமனம், பரிசோதனைகளுக்காக மாதிரிகளை பெற்று மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் அவற்றை பரிசோதித்து அறிக்கைகளை பெறக்கூடிய வசதி, அவசர தேவைகளுக்கு மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியை பயன்படுத்த ஏற்பாடுசெய்தல் போன்ற விடயங்களை உடனடியாக செய்துதருவதாக உறுதியளிக்கப்பட்டபோதும் இதுவரை அவை எதுவும் நிவர்த்திசெய்யப்பட்டவில்லை.

ஏறத்தாள கடந்த இரண்டு மாதங்களுக்கும் 10 க்கு மேற்பட்ட வைத்தியர்கள் சுழற்சிமுறையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இது நிரந்தர சேவை நிலையம் அல்லாததால் காலையில் உரியநேரத்திற்கு அவர்கள் கடமைக்கு சமூகமளிக்காததுடன் நண்பகலுடன் வெளியேறியும்விடுகின்றனர். உண்மையில் எமது வைத்தியசாலையில் கடமையாற்ற ஒருசில வைத்தியர்கள் விருப்பம் தெரிவித்திருந்தபோதும் அவர்களை கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் நியமனம் செய்ய தயக்கம்காட்டிவருகின்றது.

எம்மைப்பொறுத்தமட்டில் இங்கு கடமையாற்ற விரும்புகின்ற ஒருவரை நியமிப்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் தொடர்ந்தும் வைத்தியர்களுடனும், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடனும் எங்களால் முரண்பட்டுக்கொண்டிருக்கமுடியாது. விரும்பாத ஒருவர் நியமிக்கப்பட்டால் முரண்பாடுகள் ஏற்படவாய்ப்புண்டு. யார் நியமிக்கப்பட்டாலும் எங்களது மக்களுக்கு திருப்திகரமான சேவை கிடைக்கவேண்டும்.

இங்கு கடந்த இரண்டு சனிக்கிழமைகள் அதாவது ஒக்டோபர் 29, நொவெம்பர் 5 ஆகிய திகதிகளில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியசாலை அபிவிருத்திக் குழு என்கின்ற முறையில் எங்களால் முடிந்த உதவிகளை வழங்கியிருந்தோம். வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பூரண ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்களை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் இன்றுவரை அவர்களுக்குரிய பரிசோதனை அறிக்கைகள் வழங்கப்படவில்லை. சுழற்சி முறையில் இங்கு கடமையில் ஈடுபடும் வைத்தியர்கள் அவற்றை பரிசோதிக்க தயாரில்லை.

அதுமட்டுமன்றி வழமையாக ஒவ்வொரு சனிக்கிழமைகளும் இப்பரிசோதனைகள் இடம்பெறுமென ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தும் நாளை (12) குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் குறித்த பரிசோதனை தொர்பான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதால் பரிசோதனைகள் இடம்பெறாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் இடம்பெறுவது 4 மணித்தியாலங்களுக்கும் குறைந்த காலப்பகுதியே. இக்குறுகிய காலப்பகுதிக்குக்கூட அருகிலுள்ள வைத்தியசாலையில் இருந்து ஒரு தாதிய உத்தியோகத்தரை விடுவிக்கமுடியாமல் போயுள்ள நிலையில் தினமும் எமது வைத்தியசாலையில் மருந்து வழங்கவேண்டிய கடமையிருந்தும் எமது வைத்தியசாலைக்குரிய மருந்தாளரை எதுவித மாற்று ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்ற அனுமதித்திருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

ஏற்கனவே கல்லாறு, துறைநீலாவணை உட்பட தினமும் சராசரியாக 100 க்கு மேற்பட்ட நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதந்ந நிலையில் சில மாதங்களில் அது ஐம்பது, நாற்பது என குறைவடைந்து செல்கிறது. வருகின்ற நோயாளர்ரகள் வைத்தியர் மற்றும் இதர வசதிகள் இல்லாமையால் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றார்கள். எனவே இந்த வீழ்ச்சி தொடருமாயின் அருகிலுள்ள வைத்தியசாலைகளே அபிவிருத்தியடைய வாய்ப்பு ஏற்படும். அதுவே தற்போதும் நடைபெறுகிறது.

இவ்வாறான நிலையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாத சங்கடமான நிலை எமக்கேற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் சாதகமானவிடயங்கள் நடைபெறாவிட்டால் எமது அபிவிருத்தி சங்கத்தை கலைக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த செப்ரெம்பர் பிற்பகுதியில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் இவ் ஆரம்ப மருத்துவ பிரிவுக்கு நேரில் விஜயம் செய்து குறைகள் தொடர்பாக கேட்டறிந்துருந்தமை குறிப்பிடத்தக்கது.