Editorial
பரிமாணம்

மொட்டுக் கட்சியின் வீராம்பு

நாட்டை சாம்பல் மேடாக மாற்றியவர்கள் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் முயற்சிகளில் இப்பொழுது இறங்கி இருக்கின்றார்கள்.
மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஓடி ஒழித்தவர்கள், மீண்டும் அரசியலில் வரிந்து கட்டிக்கொண்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் கால் பதிக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுசன பெரமுன இப்பொழுது மாற்று வடிவம் எடுத்து மாவட்டம் தோறும் படையெடுக்கிறார்கள்.
அடுத்த தேர்தலில் குதிக்கப் போவதாக முன்னரை போல் மேடைகளில் கை தூக்கி நிற்கும் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று சூளுரைக்கிறார்.
தேர்தலில் போட்டியிடுவது ஒன்றும் புதுமை அல்ல. ஒரு கட்சி தேர்தலில் குதிப்பது அதனுடைய ஜனநாயக உரிமை. ஆனால் இந்த நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளி, மக்களை குற்றியுர் ஆக்கி இருக்கிற இந்தக் கட்சியும், அதன் தலைவர்களும் தவறுக்கு பொறுப்பேற்காத நிலையில், மக்களிடம் மண்டியிட வருகிறார்கள்.
” நாட்டை ஆள்வது நாங்கள் தான். ஆட்சியில் நாங்கள் தான் இருக்கிறோம்… ” இது மஹிந்த ராஜபக்சவின் மமதை பேச்சு. ஒரு நேர சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மக்களை துன்பத்தில் வைத்து விட்டு, மமதையில் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
நாடு இன்று இருக்கின்ற அலங்கோலத்திற்கு முழு காரணமும் மஹிந்த ராஜபக்ஷவும் மொட்டு கட்சியும் தான். குடும்ப ஆட்சியை தக்க வைத்து, கோலோச்சும் சிந்தனையை நகர்த்திக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டின் நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு கொரோனா தான் காரணம் என அடித்து சொல்கிறார்.
கொரோனா உலக பிரச்சனை. சகல நாடுகளும் அதில் இருந்து மீண்டு எழுந்தன. அவர்களுடைய திட்டமிடலும் ஊழலற்ற நிர்வாகமும் அந்த நாடுகளை மீட்டெடுத்தன. இலங்கையில் நடந்ததெல்லாம் போலி புத்திஜீவிகளின் நடவடிக்கைகள் ஆகும். முகாமைத்துவம் செய்ய முடியாத மடையர்களால், ஏற்படுத்தப்பட்ட பேரழிவு இது என்பது உலகமே புரிந்து கொள்ளும்படி ஆகியிருக்கிறது. செய்யத் தெரியாமல் செய்துவிட்டு கொரோனா மீது பழியைப் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
நாட்டை ஆண்டவர் தம்பி கோட்டாபய ராஜபக்ஷ, நிதிக்கு பொறுப்பாக இருந்தவர் அவரது மற்ற தம்பி பசில் ராஜபக்ஷ,, அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ பத்தாண்டுகள் நாட்டை ஆண்டவர். தம்பியின் முகாமைத்துவம் வழிதடுமாற் றமாக இருந்தால்,அண்ணன் திருத்தி இருக்க வேண்டும். அல்லது நாட்டுக்கு வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இதனை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செய்யவே இல்லை.
தம்பிமாரை காட்டிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்த ராஜபக்ஷ, தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே கொரோனா தாக்கத்தின் மீது பழியை போடுகிறார்.
விட்ட தவறை ஒத்துக் கொள்வது தான் பண்பட்ட அரசியல் தலைமையாக இருக்க முடியும். பாதிக்கப்பட்ட விவசாயப் பெருங்குடி மக்கள் கோவணத்தோடு கொழும்பில் வந்து போராட்டம் நடத்திய போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்த ராஜபக்ஷ க்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே ‘வியத்மக ‘ என்ற அமைப்பு செயல்பட்டது. அறிவு சார் பயணம் என்பது இதன் அர்த்தம். பெரும் சிங்கள புத்தியைக் கொண்ட ஒரு அமைப்பு இது என்று கூறலாம். இவர்கள் வழங்கிய ஆலோசனை தான் கோட்டாவை நாட்டை விட்டு துரத்தின. ஒரு திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு சாதாரண விடயம் தெரியாதவர்களாகவே நாட்டை சீரழித்தனர்.
இரசாயன உரம் நாட்டுக்கு ஆபத்தானது என்பது தெரியும். அதற்குப் பதிலாக சேதனப் பசளைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்க உயர் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எடுத்த தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது எள்ளளவும் இவர்களுக்கு தெரியவில்லை. இரசாயன பசளைகளை உடனடியாக நிறுத்தி,சேதனப் பசளை களை பயன்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட அவசரமான முடிவும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் நாட்டை போராட்டக் களமாக மாற்றியது.
விவசாயிகளின் போராட்டங்களோடு நாடு முழுவதும் மக்கள் ஒன்றுபட்டதனால்,
மொட்டுக் கட்சியின் தலைவர்களை ஓட வைத்தது. நாட்டில் போராட்டங்கள் வெடித்த போது கூட, தவறுகளை ஒப்புக் கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, தனது சகோதரர்களை பாதுகாப்பதிலேயே முன்னின்று செயல்பட்டார்.
நிலைமை மோசமடைந்த நிலையில் ஓடி ஒளிந்தது மட்டுமல்ல, பதுங்கியும் மறைவிடங்களில் இருந்த இவர்கள், இப்பொழுது வாலைத் தூக்க ஆரம்பித்திருக்கிறார்கள். “நெருக்கடியான நிலையில் பதவிகளில் இருந்து விலகிய படி,நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்”… இப்பொழுது நடப்பதும் எங்கள் ஆட்சி தான் என்று மஹிந்த ராஜபக்ஷ வெட்கமில்லாமல் கூறுகிறார்.
ஒரு நேர சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மக்கள் நொந்து போய் கிடக்கின்ற நிலையில், அரசியல் செய்வதற்கு மொட்டுக்கட்சி இறங்குவதை மக்கள் ஏற்க போவதில்லை. மக்கள் துன்பங்களில் துவண்டு கிடந்தாலும் அதைப்பற்றி அக்கறை அவர்களுக்கு இருக்கவே இல்லை . ஊழல்வாதிகளையும் காடையர்களையும் வைத்துக்கொண்டு, மாவட்டம் மாவட்டமாக இப்பொழுது செல்லத் தொடங்கி இருக்கிறார் மகிந்த.
தோல்வி கண்ட தலைமையும், தோல்வி கண்ட கட்சியும் மீண்டும் மக்கள் மத்தியில் புது முகத்தோடு புதிய முகங்களை காட்டி ஆட்சிக்கு வருவதற்கு எத்தனிக்கிறார்கள். இவர்களுக்கு மக்கள் எழுச்சியுடன் பாடம் புகட்டுவார்கள்.