நாட்டில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் முதலாவது அரையாண்டுக்குள் 148 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.
எனினும், இந்த வருடம் 342 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 25 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வருடம் 50 இற்கும் அதிகமான HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும் அவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் அடங்குவதாக விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
பாடசாலைகளில் பால்நிலை கல்வியை உரிய முறையில் பெற்றுக் கொடுக்காமையே இவ்வாறான தொற்று நோய்கள் அதிகம் பரவுவதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
HIV தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் நபர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது என தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.