நூருல் ஹுதா உமர்
அண்மையில் நியமிக்கப்பட உள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக நம்பி வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ள நகர சபையை அரசிடம் கேட்டு பெற்றுக்கொடுங்கள். பெற்றுக்கொடுக்க முடியவில்லை எனில் தனது எம்பி பதவியை இராஜினாமா செய்து குதிரை வேட்பாளர்களில் விருப்பு வாக்கில் இரண்டாம் இடத்தில் உள்ள சாய்ந்தமருதை சேர்ந்த ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்.சலீமுக்கு வழங்குங்கள் என தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் அமைச்சு பதவியை பெற்று அதாவுல்லாவால் எந்தவொரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம்.
அமைச்சு பதவியை பெற்று நீங்களும் உங்களை சார்ந்தோரும் சொகுசாக வாழலாமே ஒழிய மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாது.
இவ்வாறு எவ்வித பிரயோசனமும் அற்ற அமைச்சு பதவியை பெறுவதை விடுத்து , நீங்கள் ஏற்கெனவே வாக்குறுதி அளித்த சாய்ந்தமருது நகர சபையை கேட்டுப் பெறுங்கள். சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை வைத்து பெருமளவு வாக்குகளை பெற்று எம்பியானீர்கள். போலி வர்த்தமானி மூலம் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றினீர்கள்.
தேர்தல் ஒன்று வரலாம் என்ற கதையாடல்கள் மேலோங்கி வரும் நிலையில் , மீண்டும் சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை உயிர்ப்பிக்க முயல்கிறீர்கள். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடல்ல.
அமைச்சு பதவி வேண்டாம்; நான் வாக்குறுதி வழங்கி, என்னை பாராளுமன்றம் அனுப்பிய சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபையை தாருங்கள். இல்லையேல் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக கூறுங்கள்.
இப்படி உங்களால் கூற முடியுமா? ஆகக் குறைந்தது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, கடந்த தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் சார்பில் குதிரையில் களமிறங்கிய சாய்ந்தமருது சலீமுக்கு வழங்கி சாய்ந்தமருது மக்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று யஹியாகான் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.