(அஸ்லம் எஸ்.மௌலானா)
மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
மருதமுனையிலுள்ள பல சமூக சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்ற மின்னொளி விளையாட்டுப் போட்டிகளால் இரவு நேரங்களில் இப்பிரதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுவதாகவும் ஒழுக்க நெறிமுறை, கட்டுக்கோப்பு சீர்குலைந்து வருவதாகவும் வணக்க வழிபாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது குறைவடைந்து செல்வதாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கான காலம் நெருங்கி வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் மின்சார நெருக்கடிக்கு மத்தியில் மின்னொளி விளையாட்டுக்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறான காரணங்களை மையப்படுத்தி மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை உடனடியாகத் தடை செய்யுமாறு பொது அமைப்புகள் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதையடுத்தே கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழுள்ள மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் ஊர், சமூக நலன் கருதி, மறு அறிவித்தல் வரை மின்னொளி விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.