அரசாங்க அலுவலகங்களுக்கு சேவைகளை பெறுவதற்கு மக்களின் வருகை அதிகரித்து வருவதனால் அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் வேலைக்கு அழைப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அறிய முடிகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து குறைவாக காணப்பட்டமையினால் அரச ஊழியர்கள் பணிக்கு வருவதிலும் அரசு அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வருவதும் சிரமமாக இருந்து வந்தது, தற்போது எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஓரளவு தளர்ந்து இருக்கும் நிலையில் அரச அலுவலகங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்றின் மூலம் ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது அந்த சுற்றறிக்கையின் குறிப்பிடப்பட்ட படி கால அவகாசம் நிறைவுற்றதும் அரச ஊழியர்களை 5 நாட்களும் பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வருகிறது.
இவ்வாறாயினும் தற்போது தேவை கருதி 5 நாட்களும் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் சேவைகளுக்கு ஊழியர்களை பணிக்கு அழைக்க முடியும் என குறித்த செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.