நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றி வந்த சில மாகாண திணைக்களத் தலைவர்களை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவிற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய திருமதி. ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய (திருமதி) எஸ்.சரணியா மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராகவும், மாகாண கூட்டுறவுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய ஏ.ஜி.தேவேந்திரன் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய கே.இளந்துடுதன் மாகாண கூட்டுறவு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இடமாற்றங்களைப் பெற்ற அதிகாரிகள் இன்று (02) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலின்போது இடமாற்றங்களைப் பெற்றவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இடமாற்றங்களைப் பெற்ற சகல அதிகாரிகளும் தங்களுக்கான கடமைகளை உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும், அதில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் சகல அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.