உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதுகள் தொடர்கிறது – இந் நிலையில் அமெரிக்க உளவு அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாசகார பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந் நிலையில் கொழும்பு அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது.

இந் நிலையில் ,

கைது செய்யப்பட்டு, 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தமையை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதிப்படுத்தியுள்ளர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர், குற்றப் புலனாய்வு அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, குறித்த கைதியுடன் பேச அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தடுப்புக்காவலில் உள்ள ஒரு சந்தேகநபருடன் தொலைபேசியில் கலந்துரையாடுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.