வி.சுகிர்தகுமார்            

  தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் இணைப்பாளர்களை தெளிவூட்டும் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நேற்றிரவு (01) நடைபெற்றது.


ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் தலைமை வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்;ஸ கலந்து கொண்டு வேட்பாளர்களை தெளிவூட்டினார்.


அவர் இங்கு குறிப்பிடுகையில் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டாம் உண்மையை சொல்லி வாக்கினை பெறுமாறும்  இனவாத கருத்துக்களை பேசுவதையும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.
மேலும் சுவரொட்டிகளை தேவையற்ற விதத்தில் ஒட்டுவதை தவிர்க்குமாறும் உள்ளுராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை காத்திரமான முறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் சரியான திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கும் எனவும் கூறினார்.


ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மூன்று கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு ஒன்று அடங்கலாக நான்கு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.


10 வட்டாரங்களில் இருந்து வட்டார ரீதியாக 10 உறுப்பினர்களும் மேலதிக ஆசனங்கள் 06 அடங்கலாக 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 76 பேர் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.