இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பம்!

இன்று தொடக்கம் வேட்புமனுத் தாக்கல்!!

சுதந்திர இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பமாகிறது.

இன்று(17) திங்கட்கிழமை தொடக்கம் வேட்புமனுத் தாக்கல் நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது.

இது எதிர்வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக் குப் பின்னர் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

இலங்கையில் 24 மாநகர சபைகளுக்கும் 41 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்குமாக மொத்தம் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன .

இதற்க்கான கட்டு பணம் நேற்று வரை செலுத்தப்பட்டு வந்தது.

 இன்று 17 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை  வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளது .

35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமையும் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடும் ஒதுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ள அரசியல்க்கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.

சரியாகவும், முறையாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுவின் ஒரு பிரதியை மாத்திரம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய அனைத்து ஆவணங்களையும் உரிய காலப்பகுதியில் தங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவிக்கிறார்.

இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட பதிவாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழின் பிரதியொன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லாத பட்சத்தில் சமாதானநீதவான் ஒருவரினால் அல்லது சத்தியப்பிரமாண ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக்கடதாசி வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டிருக்கல் வேண்டும்.

இன்று திங்கட்கிழமை சாதாரணதர பரீட்சை ஆரம்பமாவதன் காரணமாக பரீட்சாத்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுதாக்கலில் ஈடுபடுமாறு கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்,ஏ.எல் ரத்னாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை,அனைத்து கட்சிகளும் பொருத்தமான வேட்பாளர்களை நேற்று வரை தெரிவு செய்வதில் ஈடுபட்டிருந்தன. இன்னும் சில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் வேட்பாளர் தெரிவை பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறை 2018 ஆம் ஆண்டு  முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது .

அதாவது இவ் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வட்டார ரீதியிலும், விகிதாசார ரீதியிலும் உறுப்பினர்கள் தெரிவாகும் வகையில்  நடத்தப்படுகிறது.

வட்டாரப் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக போனஸ் முறையில் விகிதாசார ரீதியிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

நான்கு ஆண்டுகள் ஆயுட்காலத்தைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022-ல் முடிவடைந்தது . எனினும் அன்றிலிருந்த  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தை நீடித்தார்.

பின்னர் 2023 தேர்தலை நடத்த வேட்புமனு கோரப்பட்டு கட்டுப்பணமும் செலுத்தப்பட்ட போதிலும்  தேர்தல் பிற்போடப்பட்டு வந்தது .

அதாவது அது 2022.01.10 ஆம் திகதிய  2262/08 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் உறுப்பினர்களின் பதவிக்காலம் 19.03.2023 உடன் முடிவுறுத்தப்படுவதால் சபைகள் செயலிழந்து போனது. 

மேற்குறித்த சபைகளின் நிருவாகம் , ஜனாதிபதிக்கு உள்ளூராட்சி சபைகளின் சட்டங்களின் கீழுள்ள அதிகாரங்களின் ஊடாக வர்த்தமானி பிரசுரம் மூலம் ,  விசேட ஆணையாளர்களுக்கு ஒப்படைக்கப்படலாம் . 

மேற்குறிப்பிட்டவாறு வர்த்தமானிப் பிரசுரம் மூலம் விசேட ஆணையாளர்கள் நியமிக்கப்படாத பட்சத்தில் ,

 பிரதேச சபைகளின் செயலாளர்கள் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 9(3)  இன் கீழும் , நகர சபைகளின் செயலாளர்கள் நகரசபைகள்  கட்டளைச் சட்டத்தின் பிரிவு 184 A ,இன் கீழும் மாநகர ஆணையாளர்கள் மாநகரசபைகள்  கட்டளைச் சட்டத்தின் பிரிவு 286A ,இன் கீழும் சபைகளினதும் ,தவிசாளர்கள் / முதல்வர்கள் இனதும் அதிகாரங்களைப் பெறுவர்  என்று கூறப்பட்டது .

ஆதலால் இதுவரை காலமும் செயலாளர்களினால் சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

2024 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நடத்த ரணில் நடவடிக்கை எடுப்பார் என்று பார்க்கப்பட்ட பொழுதிலும் ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தலை நடாத்தினார்.

அதன் காரணமாக தேசிய மக்கள் சக்தி 159  உறுப்பினர்களை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

 கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரமுன என்று மாறி சபைகளை கைப்பற்றி வந்தன.

இருந்த போதிலும் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு முக்கிய நிகழ்வுகளை தொடர்ந்து அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலர் தாமாக ஒதுங்கிக் கொண்டனர்.

 இந்த நிலையில் இம் முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் கட்சிகளிடையே பெரும் சவாலாக மாறி இருக்கிறது .

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  நாட்டில் அனாவசிய செலவுகளை குறைத்து அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார் .

அண்மையில் நடைபெற்ற சுதந்திர தினம் வெளிநாட்டு பயணங்கள் அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் என்பனவெல்லாம் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

ஆனாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் 2018 அடிப்படையிலேயே அதாவது வட்டார ரீதியிலும் விகிதாசார ரீதியிலும் உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

 2018 க்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளில் இருந்த உறுப்பினர்களை புதிய முறைமையினால்  இரண்டு மடங்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகிறார்கள். 

இந்த அதிகரிப்பு மேலதிக செலவினத்தை  ஏற்படுத்துவதால் இதை 4000 ஆக குறைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்திருந்தார்.

 உதாரணத்துக்கு 10 பேர் இருந்த சபையில் இன்று 21 பேர் தேவையற்ற வகையில் உள்ளனர்.இது மேலதிக நிதி விரயம் செய்யப்படுவதாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தேவையற்ற பாதுகாப்பு வாகன பயன்பாடு போன்றவற்றை கவனத்தில் எடுத்துள்ளார்கள் .

தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வருவதில் காலத்தை இழுத்தடிக்காமல் தேர்தலை நடத்த வேண்டும் என்ற  தீர்மானத்திற்கு அரசாங்கம் வந்தது .

அதாவது பழைய முறையிலேயே தேர்தல் இடம் பெற உள்ளது.

அதே நேரம் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகமான புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களை விட உள்ளூராட்சி தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக புதிய வாக்காளர்கள் இருப்பார்கள் என்பதையும் மறந்து விட முடியாது.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு நிருபர்