கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள், பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்தவாறு வீதியில் பயணிப்பவர்கள், அதிக ஒளி, ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நேற்று (13) கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீதி போக்குவரத்து சீர்கேடு, கலாசார சீர்கேடு தொடர்பான முறைப்பாடுகள், சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும்போது அல்லது முடிவடையும்போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் தகவல் வழங்குபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் இக்கலந்துரையாடலில் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடுதல், பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தல், சட்டவிரோதமாக பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல், தான்தோன்றித்தனமாக வாகனங்களை தரித்து நிறுத்துதல், வர்த்தக நிலையங்களின் விளம்பரப் பலகைகளை பிரதான வீதியின் நடைபாதையில் காட்சிப்படுத்துதல், சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுதல், கல்முனை மாநகர பகுதியில் மீண்டும் வழமை போன்று ஒரு வழிப்பாதையை உருவாக்குதல் முதலிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
அத்துடன், நீர் தேங்கிக் காணப்படும் வீதிகளை இனங்கண்டு சீர் செய்தல், கலாசார சீரழிவுகளை தடுப்பதற்கான பொறிமுறைகளை கையாளுதல், கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டன.
மேலும், சமூகத்துக்கு தீமையை ஏற்படுத்தும்படி முறையற்ற, சீர்கேடான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு தொடர்புகொண்டு அறியத்தருமாறும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளனர்.