சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் கணக்காளராக திருப்பிரகாசம் பதவியேற்பு!
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் சீனித்தம்பி திருப்பிரகாசம் தமது கடமைக்கு மேலதிகமாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் கணக்காளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த கணக்காளர் வெற்றிடத்திற்கு புதிதாக பதில் கணக்காளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த எஸ். திருப்பிரகாசம் இன்று (10) திங்கட்கிழமை , சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தர்மலிங்கம் பிரபாசங்கர் முன்னிலையில் பதவியைப் பொறுப்பேற்றார்.
நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இதுவரை ஒரு கணக்காளர் இருக்கவில்லை. வைத்தியசாலைக்கான நிதி விடயங்கள் அனைத்தும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இனி, வைத்திய சாலைக்கான நிதி நடவடிக்கைகள் அனைத்தும் வைத்திய சாலையிலேயே பதில் கணக்காளரால் மேற்கொள்ளப்படும் என்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தர்மலிங்கம் பிரபாசங்கர் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கணக்காளர் இல்லாமை பற்றிய விடயம் பாராளுமன்றம், அமைச்சுக்கள் போன்ற பல இடங்களில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




