தமிழின படுகொலைக்கும்; வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம்.பி வலியுறுத்து!


ஐநாவின் 58 ஆவது மனித உரிமை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 3002 ஆவது நாளாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களது உறவுகள் கிடைப்பார்கள் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் இலங்கை வரலாற்றில் 3000 நாட்களை தாண்டி அகிம்சை வழியில் போராடி வருகின்றார்கள். இந்த மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். தமது பிள்ளைகளை ,சகோதரர்களை, கணவரை இராணுவத்திடம் ஓப்படைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கான நீதி இன்றுவரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்துக்கு மேல் எமது தமிழ் மக்கள் கொல்லப்பட்டுடிருக்கின்றார்கள். இனப்படுகொலை என்பது இந்த நாட்டில் அரங்கேறியுள்ளது. எமது மொழி, அடையாளம் ,கலை, கலாசாரம், இருப்பு ,இடம் என்பன தொடர்ச்சியாக இனவழிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது.

கடந்த கால அரசாங்கங்களால் தமிழின அழிப்பு தொடர்ச்சியாக இடம் பெற்று வந்துள்ளது. எமது இன அழிப்புக்கு காரண கர்த்தாவாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது உள்நாட்டு பொறிமுறையூடாகவோ ,கலப்பு பொறிமுறையூடாகவோ இடம் பெறாமல் சர்வதேச குற்றவியல் நீதி மன்னறத்தின் ஊடாக எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.


ஐக்கிய நாட்டு பேரவையில் மனித உரிமை அமர்வு இடம் பெறும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேண்டுகோளை ஐநாவிடம் முன்வைக்கின்றோம்.

இன்றும் தமது உறவுகளை தேடி போராடுகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். பல விடயங்களை கூறிவரும் இந்த அரசாங்கமாவது. எமது மக்களுக்கு சிறந்த நீதியை தர வேண்டும்.

இதற்கான அலுவலங்கள் இலங்கையில் அமைக்கபட்டிருந்தாலும் அதில் எமக்கு நம்பிக்கை இல்லை ஏன் என்றால் இதுவரை சரியான நீதி கிடைக்கவில்லை என்றார்.