மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடித்தால் பலன் கிடைக்கும்?
இன்று மகா சிவராத்திரி. அதனையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது.
இன்று (26.02.2025) புதன்கிழமை இந்துக்கள் சிவனை நினைந்து வழிபடும் மகா சிவராத்திரி தினமாகும்.
இந்து மதம் என்பது மதம் இல்லை , அது வாழ்வியல் நெறிமுறை , எப்படி ஒரு மனிதன் வாழவேண்டும் என்று சொல்லும் நெறிமுறை .
அதேபோல் சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.
சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.
சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?
மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும்,
முதலும், முடிவும் இல்லாதவர்.
மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது… அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.
சிவ இராத்திரி எதனால் என்று புராணக்கதைகள் கேட்டிருக்கிறோம்.
ஒரு வேடன் புலிக்கு பயந்து மரத்துக்கு மேலே ஏறி அமர்ந்திருந்ததும், அது வில்வ மரம் என்பதும், தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருக்க, அது கீழே இருக்கும் சிவலிங்கத்தில் விழுந்ததனால், அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி அடிமுடி தேடிய படலமும் உண்டு
சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
சிவராத்திரி நாளில் பகல் & இரவு முழுவதும் உணவு எதுவும் உண்ணாமல், உறங்காமல் கண் விழித்து, சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பூஜையில் கலந்துகொண்டு, சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் முழுமையாக கிட்டும்.
சிவாலயங்களில் சிவராத்திரி அன்று நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்.
முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்கள்.
முதல் ஜாமப்பூஜைக்கு சிவலிங்கத்திற்கு பசும்பால் ( பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல), தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்தும் கலந்த பஞ்சகவ்யம் அபிசேகம் செய்து, சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்து, பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும். முதல் ஜாமம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்த்தை ஜபிக்க வேண்டும்.
*முதல் ஜாமப்பூஜை பலன்கள் :-* சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள். பெரும் புண்ணியம் கிட்டும். அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;
இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்கள்.
சிவலிங்கத்திற்கு பால் (காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு), தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, அகில் குழம்பு பூசி தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்து நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும். நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும். இரண்டாம் ஜாமம் முழுவதும் “சிவாய நம” என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபிக்க வேண்டும்.
*இரண்டாம் ஜாமப்பூஜை பலன்கள் :-*
பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள். சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது. தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும். லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள். நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும். நாடு சுபிட்சமடையும், நாமும் நன்றாக இருப்போம்.
மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்கள்.
சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்து, அரைத்த பச்சைக் கற்பூரம் பூசி, வில்வத்தால் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும். மூன்றாம் ஜாமம் முழுவதும் சாம வேதம் பாராயணம் அல்லது சிவயசிவ காரண பஞ்சாட்சரத்தை ஜபிக்க வேண்டும்.
*மூன்றாம் ஜாமப்பூஜை பலன்கள் :-*
போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும். இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்;இந்த நேரத்தில் யார் “சிவயசிவ; சிவயசிவ” என்று ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்.
நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்கள்.
சிவலிங்கத்திற்கு கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் செய்து அரைத்த குங்குமப்பூ பூசி வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்.
சிவனுக்குரிய இந்த பெரு இராத்திரியை சிவ சிந்தனையுடன் மேற்கொள்வோமாக!
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்