காரைதீவில் VCOT கணினிகற்றல் கூடம் திறந்து வைப்பு!
( வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன் காரைதீவு ஸ்ரீ சாரதா நலன்புரி நிலையத்தில் கணனி கற்கைநெறிக்கான வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் துணைத்தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஶ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களின் புனித தரிசனத்துடன், 9 இராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் வருகையுடன் இது திறந்து வைக்கப்பட்டது.
காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் மனித மேம்பாட்டு பயிற்சிநிலையத்துடன் இணைந்த VCOT கணினி கற்றல் கூடம் சிறப்பாக நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
இக்கணனி வகுப்பறைக்கான நிதியுதவி அமரர்.திருமதி.மகேஸ்வரி அம்பாள் குமாரசுவாமி நினைவாக அவரது குடும்பத்தினரால்(அமெரிக்கா) மனித நேயம் அமைப்பின் நெறிப்படுத்தலில் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மனித நேயம் அமைப்பின் தலைவர் திருமதி. கயிலாசப்பிள்ளை அம்மையார், மனித நேயம் அமைப்பின் அமெரிக்காவிற்கான பொறுப்பாளர் கே.அரவிந்தன் இதற்கு தொழில்நுட்ப வசதி வழங்கும் கிரான் குளம் விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் கந்தப்பன் பிரதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்தக் கூடம் மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் (Basic Computer Training) கற்றலினூடாக திறன்களை மேம்படுத்தி, அவர்களின் தொழில்பாதையினை உருவாக்க உதவுகிறது. இந்த மையம் கணினி கல்வியைப் பறைசாற்றி இளைஞர்களின் தொழில்நுட்பத் திறனை வளர்க்க செயல்படும் என இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.








