“அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப பெரியநீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றி தர வேண்டும்.” அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்.

-பிரபா-

பெரியநீலாவணையில் புதிய மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டதை அடுத்து பெரியநீலாவணை பொதுமக்களால் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம்(13) அந்த ஆர்ப்பாட்ட களத்துக்கு வருகை தந்த அம்பாரை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் அவர்களிடம், புதிதாக அமைக்கப்பட்ட மதுசாலையை அகற்றி தருமாறு கோரிய மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

இந்த அரசாங்கம் தேர்தல் காலங்களில், கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான சாலைக்கான அனுமதி பத்திரங்களை ரத்து செய்து தருவதாக கூறியே
மக்களிடம் வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்தனர். ஆனாலும் புதிய மதுபான சாலைக்கான அனுமதி பத்திரங்களை இன்னும் ரத்து செய்யவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நினைத்தால் எந்த விடயத்தினையும் ரத்து செய்ய முடியும். வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விடயம் என்றாலும் அவரால் ரத்து செய்யக்கூடிய அதிகாரம் அவருக்கு உண்டு . எனவே மக்கள் விரும்பாத, மக்களுக்கு அநீதி விளைவிக்க கூடிய, கிராமத்துக்கு தீங்கு தரக்கக்கூடிய இவ்வாறான
மதுபான சாலை அனுமதி பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் இது விடயமாக தான் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை செய்வேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது பெரிய நீலாவணையிலேயே அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை தொடர்பாக தான் உரையாற்றியதாகவும், அமைச்சர் விமல் ரத்னாயக அவர்களோடு பேசி உள்ளதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கையை நான் தொடர்ந்து முன்னெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.