எழில்மிகு மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை ; இன்று (10) திறப்பு !

உலகளாவிய ரீதியில் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனின் இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான  முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது.

 வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும் சிவானந்த நலன்புரி நிலையமும் இன்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சுப முகூர்த்த வேளையில் திறந்து வைக்கப்பட இருக்கின்றது .

கொட்டகலையில் மனோரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ள பகவான் ராமகிருஷ்ண  திருக்கோவிலின்  மகா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை(10) காலை 9 மணியளவில் இடம்பெற இருக்கின்றது .

அத்துடன் மலையகத்துக்கான சிவானந்தா நலன்புரி நிலையமும்  திறந்து  வைக்கப்பட இருக்கிறது .

இதற்கான காணி மற்றும் உதவிகளை அங்குள்ள கொடைவள்ளல் இகிமிசன் அபிமானி ராமசாமி ரெட்டியார் விஜயபாலன் மற்றும் 

லலிதா விஜயபாலன் தம்பதியர் நல்கி வருகின்றனர்.

கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நிகழ்வுகள் அனைத்தும் இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ   தலைமையில்   நடைபெற இருக்கின்றன .

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பல தடவைகள் கொட்டகலை நேரடியாக சென்று சகல ஏற்பாடுகளையும்  கவனித்து வருகிறார் .

நாளை அவர் வரவேற்புரை நிகழ்த்தவிருக்கிறார்.

இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்த ஜி மகராஜ் கலந்து சிறப்பிக்க வருகிறார். 

மேலும் இந்தியா காசி ராமகிருஷ்ண மடம் தலைவரும் முன்னாள் இலங்கை மிசன் தலைவருமான சுவாமி சர்வரூபானந்த  ஜி மகாராஜ் அவர்களும் மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்யதீபானந்த ஜீ மகராஜ் அவர்களும் இதற்கென இந்தியாவிலிருந்து வருகை தர இருக்கிறார்கள்.

கும்பாபிஷேக கிரியைகளை சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு. வை.கு.வைத்தீஸ்வர குருக்கள் நடத்தி வைக்க இருக்கின்றார். 

முன்னதாக இன்று 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணிவரை கொட்டகலை பிரதேசத்தில் மாபெரும் 

ஊர்வலம் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார் .

 அப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக கலாசார பாரம்பரியங்களோடு இவ்வூர்வலம் இடம் பெறவிருக்கிறது.

இன்று திங்கட்கிழமை

காலை 6 மணிக்கு ஹரிங்டன் பி தோட்டம் மாரியம்மன் ஆலயத்திலிருந்து கும்பாபிஷேக ஊர்வலம் ஆரம்பித்து 6.15 மணியளவில் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆலயத் திருக்கதவு திறந்து வைக்கப்படவிருக்கிறது. 

 காலை 9 மணியளவில்  பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தர் அன்னை சாரதா தேவியார் ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் மிசன் அபிமானிகள் கொட்டகலையில் ஒன்று கூட விருக்கிறார்கள் .

இத் திறப்பு விழா சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு  நிருபர்.