108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!
( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுர அமைப்பு திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இராஜராஜ சோழனினால் இவ் ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் “கந்தபாணத்துறை” என அழைக்கப்பட்ட திருக்கோவில் சங்ககாலம் மருவிய பின்பு திருக்கோவில் என அழைக்கப்பட்டது.
ஆலயத்தின் மூலப்பொருளான 108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அடித்தளம் இட்டு இதுவரை காலமும் முற்றுப் பெறாத நிலையில் 33 அடி உயரத்தில் காணப்படுகின்றது.
அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அடுத்த கட்ட திருப்பணியை ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையிலான பரிபாலன சபையினர் கூட்டம் கூடி அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்துள்ளனர்.
அதன் முதற் கட்டமாக நாடறிந்த சமூக செயற்பாட்டாளர் பரோபகாரி முன்னாள் கல்முனை லயன்ஸ் கழகத் தலைவர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் முதலிரு தளங்களை அமைக்க முன்வந்துள்ளார்.
ஆரம்ப வேலைகளை தொடங்கும் கிரியைகளை ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக் குருக்கள் நடாத்தினார்.
தொடர்ந்து ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் மற்றும் வண்ணக்கர் வ.ஜெயந்தன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் கூடி திருப்பணி வேலைகளை ஆரம்பித்தனர்.
அச்சமயம் முதற் கட்டமாக மனமுவந்து இரு தளங்களை அமைக்க முன்வந்த திருக்கோவிலைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் குருவால் காளாஞ்சி வழங்கி வைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதில் ஆலய நிர்வாகத்தினர் வட்டார பிரதிநிதிகள்,ஊர்ப் பெரியோர்கள், புத்திஜீவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.