தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை?

-/அலுவலக நிருபர்

கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகளே இவ்வாறு இதுவரை வழங்கப்படாது உள்ளதாக அறிய முடிகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் கீழ் வருகின்ற பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள வேளையில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இதுவரை வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுத் தேர்தல் இடம்பெற்று ஏறத்தாழ இரண்டடை மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறவில்லை என்று உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவித்திருப்பதுடன் இது தொடர்பில் அவர்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு முறைப்பாடு ஒன்றையும் வழங்க இருப்பதாக அறிய முடிகின்றது.

கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களுக்கு கல்முனை பிரதேச செயலகத்தின் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என்பதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி உடனடியாக அலுவலர்களுக்கு உரிய கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.