மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்

பாறுக் ஷிஹான்

அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை வர்த்தகர்கள் சிலர் மேற்கொள்வதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை அக்கரைப்பற்று  மாநகர சபைகள்  உள்ளிட்ட  சம்மாந்துறை காரைதீவு  நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் இறக்காமம் நாவிதன்வெளி உகண மகாஓயா பதியத்தலாவ தெகியத்தகண்டிய தமண நாமல்ஓயா ஆலையடிவேம்பு லகுகல பகுதிகளில் அரிசி வகைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அரிசி வகைகளை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முயற்சி செய்த போதிலும் வர்த்தர்கள் சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதுடன் அதிக விலைக்கு தற்போது அரிசியை கொள்வனவு செய்ததாக கூறி அதிகளவான விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும் சில வர்த்தகர்கள் அரிசி வகைகளை பதுக்கல் செய்வதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நுகர்வோர்  அதிகார சபையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

மேலும் சில அரிசி ஆலைகள்  வர்த்தக நிலையங்கள்  அரிசி  விடயத்தில் மாபியா இரகசியங்கள் பேணி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தவிர அரிசி  விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக கட்டணங்கள் அறவிடுவது அரிசி வகைகளை   பதுக்கி  வைப்பது தொடர்பாக  பொது மக்களினால் பல்வேறு  முறைப்பாடுகள்  உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இவ்வாறான அரிசி தட்டுப்பாடுகள் இடம்பெற்ற போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள நெல் களஞ்சியசாலை வர்த்தக நிலையங்கள்  மற்றும் அரிசி களஞ்சியசாலைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு   நீதிமன்றத்தினுடாக  சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரிசி தட்டுப்பாட்டிற்கு மத்தியில் சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் நுகர்வோரால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அவ்வப்போது அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாமல் தவிப்பதாக அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன் நாட்டு அரிசி  சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகளின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.