கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகள் – பல தடைகள் தாண்டி கல்முனை மாநகரில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது – கொட்டும் மழையிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்பு!
கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் இன்று (19) 10 அடி உயரமான உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் பெருமானின் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் பெருமளவில் மக்கள் பங்குபற்றயிருந்தனர்.
கல்முனையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் இனவாத சூழ்ச்சிகள் தொடர்கதையாகவே உள்ளது. கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கமும் ,கலாசார நிகழ்வுகளும் இன்று இடம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அழைப்பிதழ்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இந்த திருவள்ளுவர் சிலையை திரை நீக்கம் செய்யும் நிகழ்வை தடுக்கும் வகையில் சில பள்ளிவாசல்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இந் நிகழ்வின் ஏற்பாட்டு நிருவாகிகள் மூவருக்கு எதிராக இந்த நிகழ்வை செய்யாமல் இருக்க கல்முனை நீதிமன்றில் பொலிஸாரால் தடை உத்ததரவு பெறப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கல்முனை வடக்கு பிரதேச மக்கள் மத்தியில் பெரும் கவலையும், மன உளச்சலும் ஏற்பட்டிருந்தது. உலகத்துக்கு பொதுவான திருமறையை அருளிய திருவள்ளுவர் பெருமானுக்கு எங்கள் பிரதேசத்தில் அதுவும் அதற்கான கலாசார வளாகத்தில் சிலையை நிறுவுவதால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை. இது இந்த மண்ணுக்குதான் சிறப்பு, இவ்வாறிருக்க இதனை தடுக்கும் சூழ்ச்சியை செய்யும் இனவாத கும்பல்களால் இனங்களுக்கிடையில் வீண் பகைமையையே ஏற்படுத்தும். இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பொலிஸாரும் துணைபோகக்கூடாது என மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
கல்முனை பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை தமிழர் கலாசார பேரவை தலைவர்,செயலாளர்,உபதலைவருக்கு எதிராக சிலை திறக்க கூடாதென நீதீமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட போதும்,பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏலவே திட்டமிட்டபடி கொட்டும் மழையிலும் திருவள்ளுவர் சிலை திரை நீக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவனந்தாஜி மகராஜ் அவர்கள் ஆன்மீக அதிதியாகவும்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ்,அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் .சிவ .மு. ஜெயரஜீ , கிருஸ்தவ மதகுரு போதகர் கிருபைராஜா ஆகியோரும் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திரைநீக்கம் செய்து திறந்து வைத்தனர். இந்த சிலைக்கு நிதிப்பங்களிப்பை நற்றமிழர் பொன் முருகவேள் அவர்கள் செய்திருந்தார். சிலை ஏற்பாடு இந்துகலாசார திணைகளம்.சார்பாக சனாதனன்.
கல்முனை பிரதேசத்தின் சகல கிராமங்களில் இருந்தும் பெருமளவான பொதுமக்களும், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்,நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
புதிய அரசாங்கம் இனவாதமற்ற,ஒருமித்த இலங்கை மக்கள் என்ற ரீதியில் பயணிப்போம் என்று தெரிவித்துள்ள போதும்,இன்றைய நிகழ்வில் இனவாதமே சிலை திறப்பிற்கான தடையை ஏற்படுத்தியது. கல்முனை தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகளுக்கு இந்த அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உலகத் திருமறையாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருக்குறளின் தந்தை திருவள்ளுவளாரின் சிலை அமெரிக்க வெள்ளை மாளிகை வளாகம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் சதுர்க்கம் ஐக்கிய நாடுகள் சபை வளாகம் என உலகின் பல்வேறு நாடுகளில் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமையப்பெற்றிருக்கும் நிலையில் கல்முனையில் தமிழர் வாழும் பகுதியில் இவ்வாறான தடை உத்தரவு கல்முனை தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.