நூலக நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் தைப்பொங்கல் விழாவும்
2005 தை மாதம் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தும் பணிகளைத் தொடங்கிய நூலக நிறுவனம் தனது பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்ட பொங்கல் நிகழ்வும், 21 ஆவது ஆண்டு ஆரம்ப நிகழ்வும் கடந்த 15.01.2025 புதன்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு நூலக நிறுவன அலுவலகங்களில் சிறப்பாக நடைபெற்றன. இரண்டு இடங்களிலும் ஏககாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு zoom தளத்தின் மூலம் ஒருங்கிணைவு செய்யப்பட்டு நிகழ்நிலையாகவும் ஆர்வலர்கள் இணைந்திருக்கக் கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் திருமதி. ரஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளின் மட்டக்களப்பு அரங்குக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் திரு. தியாகராஜா சரவணபவன், தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பிரதிப் பதிவாளரும் நூலக நிறுவனத்தின் முன்னாள் ஆளுகைச் சபை உறுப்பினருமான திரு. சஞ்சீவி சிவகுமார், கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. நிலாந்தினி செந்தூரன், போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திரு. விவேகானந்தராசா துலாஞ்சனன், ஆயுவேத வைத்தியர் திருமதி. லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நூலக நிறுவனத்தின் தலைவர் இரத்தின ஐயர் பத்மநாபஐயர் அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார். நூலக நிறுவனத்தின் அறிமுகம், வளர்ச்சிப் போக்கு மற்றும் செயற்பாடுகள் பற்றிய தெளிவுபடுத்தல் உரையினை நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினர் தில்லைநாதன் கோபிநாத் நிகழ்த்தினார். நூலக நிறுவனத்திற்கும் கல்வியியலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பு எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி, பேராசிரியர். எஸ். ரகுராம் உரையாற்றினார். பிராந்திய ஆவணப்படுத்தலும் அதன் முக்கியத்துவமும் குறித்து சஞ்சீவி சிவகுமார் உரையாற்றினார். நூலக நிறுவனத்தில் முன்னோர் ஆவணகத்தின் முக்கியத்துவமும் பற்றிய உரையை திரு. இ. மயூரநாதன் (ஆளுகை சபை உறுப்பினர்) நிகழ்த்தினார். ஆய்வும் நூலக நிறுவனத்தின் பங்களிப்பும் எனும் தலைப்பில் திருமதி. நிலாந்தினி செந்தூரன் (வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்) உரையாற்றினார்.
நிகழ்வில் தமிழ் சமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, ஆவணப்படுத்தலுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கி இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து விண்ணுலக வாழ்விற்குள் சென்ற நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினர்களான ஈழநாதன் புவனேந்திரன், பீர் முஹமட் புண்ணியமீன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் மற்றும் ஏனைய அனைத்து உறவுகளையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலுக்கு பங்களிப்பு வழங்கியோர் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு அரங்க நிகழ்வுகளை நூலக நிறுவன எண்ணிம நூலக மீரதவு அலுவலர், பஞ்சாட்சரம் டிலக்ஷன் தொகுத்து வழங்கினார்.