கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை  பூசையும் சமுத்திர தீர்த்தமும்

வரலாற்று சிறப்பும்,  பெருமையான சரித்திரத்தையும் கொண்டு, வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கின்ற நடராஜப் பெருமாளுக்கு, வருடாந்தம் நடைபெறும் திருவெம்பாவை பூசையானது, வழமை போல் உபயகாரர்களினால் நடாத்தப்பட்டுள்ளது.


இறுதி நாளான(13) சமுத்திர தீர்த்தம் இலங்கை மின்சார சபையின்  கல்முனை கிளையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் பக்திபூர்வமாக நடாத்தப்பட்டது.
அன்றைய நாளுக்கான அன்னதானம் வைத்திய பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை அடியார்களினாலும் நடாத்தப்பட்டுள்ளது .


இங்கு வீற்றிருக்கும் நடராஜ பெருமாளின் திருவடிவமானது இலங்கை மின்சார சபையின் கல்முனை கிளியினரால் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.


மேலும் இச்சித்தி விநாயகர் ஆலயமானது சுகாதார சேவையில் வாழும் தெய்வமாக கருதப்படும் வைத்திய கலாநிதி R. ஜெகநாதன் ஐயா அவர்களினாலும் (ஓய்வு நிலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வடகிழக்கு) அமரர்களான திரு சண்முகம், வைத்தியர் சிவ அன்பு ஆகியோர் கொண்ட குழுவினரின் பாரிய உழைப்பினால் ஓர் ஆலய கட்டிட வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டு கும்பாபிஷேகம், சங்காபிஷேகம் என்பன இடம்பெற்று தினசரி பூசை நடைபெறும் ஆலயமாக கொண்டுவரப்பட்டது.


இன்றைய இக்காலப் பகுதியில் இவ்வாலயம் முறைப்படியான அடுத்த  கும்பாபிஷேகத்திற்கான  புனரமைப்பு செய்யப்பட்டு சங்காபிஷேகமும் நடத்தப்பட வேண்டிய நிலையில், வைத்தியக் கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் இவ்வாலய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளது சாலச் சிறந்தது என விநாயக அடியார்களும் பொது மக்களும் கருதுகின்றனர்.