மோட்டர் சைக்கிளில் ஆற்றில்  தவறி விழுந்தவர்   சடலமாக மீட்பு

(பாறுக் ஷிஹான்)

மோட்டர் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசினை  கடக்க முற்பட்ட வேளையில்  மோட்டர் சைக்கிள் கவிழ்ந்து  தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லபட்டு   மூழ்கிய  குடும்பஸ்தர்  நீண்ட தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அட்டப்பளம் வயல் உள்ளாத்து கட்டு பகுதி  அருகில் உள்ள  ஆலயடிக்கட்டு பகுதியில் திங்கட்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில்  தண்ணீரில் தவறி விழுந்து  நீரில் அடித்து செல்லப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பிள்ளையுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்து பின்னர் தனியாக மோட்டார் சைக்கிளில் முன்செல்ல  பின்னால் மனைவியுடன் பிள்ளையும் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசுடன் இணைந்த  பாலத்தில் பயணம் செய்துள்ளனர்.

இதன் போது இவ்வனர்த்தம்  ஏற்பட்டுள்ளதுடன் தனியாக முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற   32 வயது மதிக்கத்தக்க அப்துல் லத்தீப்   இக்ராம் என்பவர் ஆற்றினுள் தவறி விழுந்து  நீரில்  அடித்து செல்லப்பட்டு காணாமல் சென்றிருந்தார்.இவர்  வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில்  சில நாட்களுக்கு முன் விடுமுறை நிமிர்த்தம் நாடு திரும்பி இருந்த நிலையில்  இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் நீரில் காணாமல் சென்றவரை தேடுவதற்கு அப்பகுதியில்  நீரோட்டத்தை குறைக்கும்  முகமாக தற்காலிகமாக துரிசு மூடிகள் சில  உரிய தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய நீர்பாசன திணைக்கள அதிகாரிகளினால் மூடப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தேடுதலில் நிந்தவூர் பொலிஸாரின் பிரசன்னத்துடன் கல்முனை  ஆழ்கடல் சுழியோடி அணி, சாய்ந்தமருது ஜனாசா பேரவை அணி,நிந்தவூர் தன்னார்வ தொண்டர் அணி என்பன கடும் முயற்சி மேற்கொண்டு சடலத்தை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் சடலத்தை  சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.பின்னர் சடலம் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.