சாய்ந்தமருது தாமரைக்குளம் சுத்திகரிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது தாமரைக் குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, அதனை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் அவசர வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாய்ந்தமருது வைத்தியசாலை, மல்ஹர் சம்ஸ் பாடசாலை மற்றும் பொது நூலகம் என்பவற்றுக்கு பின்னால் அமைந்துள்ள இக்குளமானது இப்பிரதேசத்தின் வெள்ள நீரை உள்வாங்கி – வாய்க்கால் ஊடாக கரைவாகு பிரதான குளத்திற்கு அனுப்புகின்ற ஒரு முக்கிய நீர் நிலையாக காணப்படுகிறது.

எனினும் சல்பீனியாக்கள் மற்றும் குப்பை கூழங்களினாலும் புதர்களினாலும் இதன் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக காணப்படுவதால் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் இதனை அவசரமாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிகாரிகள் சகிதம் அவர் அங்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரடியாக அவதானித்து, இப்பிரச்சினையை உடனடியாக கல்முனை மாநகர ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இதையடுத்து இக்குளத்தில் தேக்கமடைந்திருந்த சல்பீனியாக்கள், புதர்கள் மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள் வெள்ளிக்கிழமை (20) தொடக்கம் கல்முனை மாநகர சபையினால் – கனரக இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.