2022 ம் ஆண்டின் கிழக்கின் சிறந்த சஞ்சிகைக்கான விருது “வியூகம் ” சஞ்சிகைக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
-சிவ வரதராஜன்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விழா கடந்த 11.12.2024 அன்று அதன் பணிப்பாளர் திரு .ச.நவநீதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக திருகோணமலையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான கிழக்கின் சிறந்த சஞ்சிகையாக எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘வியூகம்’ சஞ்சிகைக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர்.உமா வரதராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இச் சஞ்சிகை கிழக்கு மாகாணம், கல்முனையிலிருந்து வெளிவந்த ஒரு நவீன இலக்கியத் தரம் வாய்ந்த இதழாகும். .
இதன் முதல் இதழ் 5 ரூபாய் விலையில் 1988ம் ஆண்டு சித்திரை மாதத்தில் வெளிவந்தது. இந்த இதழின் பிரதம ஆசிரியராக உமா வரதராஜன் இருந்தார். தொடர்ந்து நான்கு இதழ்கள் வெளிவந்தன. எனினும் சில காரணங்களால் அது இடையில் நின்றுவிட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த 2021 மார்ச் மாதம் புதுப்பொலிவோடு அதன் ஐந்தாவது இதழ் வெளிவந்தது.
இதில் ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமன்றி, தமிழ்நாடு, புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புகளும், குறிப்பாக மலையாள, சிங்கள, ஆங்கில மொழிமூல படைப்புகளின் மொழி பெயர்ப்புகளும். இடம்பெற்றன. இதனால், இந்த இதழ் நவீன தமிழ் இலக்கியத்தின் விசாலமான பார்வைகளையும், போக்குகளையும் கொண்டிருந்து.
பரவலாக கவனிப்பைப் பெற்றது என்பதோடு, பல புதிய இளம் படைப்பாளிகள், ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இந்த சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டனர் என்பதும் முக்கியமானது. காலத்தின் வேகத்திற்கு ஏற்ப தேக்கமடையாத இலக்கியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த சஞ்சிகையில் காணமுடிந்தது.
இதுவரை இதன் 10 இதழ்கள் வெளிவந்துள்ளன. பல் திசைப் படைப்புகளின் தேர்வு, படைப்புகளின் தரம், வடிவமைப்பு, ஓவியம், அட்டை , பயன்படுத்தப்பட்ட தாள்களின் தன்மைகள், போன்ற பல விடயங்களில் இச் சஞ்சிகை காத்திரமானதாக இருந்தது.
இதழின் ஆசிரியரான எழுத்தாளர் உமா வரதராஜன் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர்.
இவரது உள்மன யாத்திரை -சிறுகதைத் தொகுப்பு ( அன்னம் பதிப்பகம் – தமிழ்நாடு-1989 ) , உமா வரதராஜன் கதைகள் (காலச்சுவடு வெளியீடு – தமிழ்நாடு- 2011) , மூன்றாம் சிலுவை -நாவல் (காலச்சுவடு வெளியீடு -தமிழ்நாடு-2009 )
மோகத்திரை (சினிமா கட்டுரைகளின் தொகுதி, காலச்சுவடு வெளியீடு -தமிழ்நாடு- 2019)
எல்லாமும் ஒன்றல்ல – கட்டுரைத் தொகுதி ( கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியீடு 2022), என்ற ஐந்து நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
இவற்றில் ‘உள்மன யாத்திரை’ சிறுகதைத் தொகுப்புக்கு 1989 இல் வடகிழக்கு மாகாண சாகித்திய விருதும், ‘மோகத்திரை’ கட்டுரைத் தொகுப்புக்கு 2019இல் கிழக்கு மாகாண விருதும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘வியூகம்’ கிழக்கின் சிறந்த சஞ்சிகையாகத் தேர்வு செய்யப்பட்டமை குறித்து, கல்முனை நெற் குழுமம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.