பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் தியாகராசா அரச சேவையில் இருந்து ஓய்வு.

-செல்லையா-பேரின்பராசா-

கல்விப் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்பதற்கமைய கல்விப் புலத்தில் பட்டதாரி ஆசிரியராகவும்  அதிபர் தரம் பெற்ற முதலாம் தர அதிபராகவும் பணியாற்றிய கணேசலிங்கம் தியாகராசா தனது அறுபதாவது அகவையில் ( 02.12.2024 ஆந் திகதி) அரச சேவையில் இருந்து இளைப்பாறியுள்ளார்.

கல்முனை கல்வி வலயத்திலுள்ள கமு/கமு/ பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் இறுதியாக அதிபராகப் பணியாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறியுள்ள கணேசலிங்கம் தியாகராசா செந்தமிழும் சிவநெறியும் தழைத்தோங்கும் நாவிதன்வெளி திருவானூர் பதினைத்தாம் கிராமத்தில் கணேசலிங்கம் மாணிக்கம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 02.12.2024 இல் பிறந்தார்.

வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கமைய சிறு பராயத்தில் இருந்து கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை திருவானூர் பதினைந்தாம் கிராமம் கமு/சது/ விவேகானந்தா மகாவித்தியாலயயத்திலும் இடைநிலைக் கல்வியை மட்/பட்/ துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை  கமு/கமு/கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் (கணிதப் பிரிவில்) கற்றார்.

15.05.1992 ஆம் ஆண்டு கலைப்பட்டதாரி ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர் கமு/சது/நாவிதன்வெளியில் அன்னமலை மகாவித்தியாலயத்தில் பதினைந்து வருடங்கள் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி அதிகளவான மாணவர்கள் இப் பாடசாலையில் இருந்து  பல்கலைக் கழகம் செல்ல அர்பணிப்புடன் பணியாற்றினார்.

பின்னர் சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள நாவிதன்வெளி கல்விக் கோட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/சது/ குடியிருப்புமுனை சண்முகா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபர்(நிறைவேற்று அதிபர்)  என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட இவர் 2009 இல் இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய 

நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தரம் பெற்ற அதிபரானதுடன்  திருவானூர் பதினைந்தாம் கிராமத்தின் கல்வி வரலாற்றில் முதன் முறையாக போட்டிப் பரீட்சை மூலம் இருவர் அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தனர் இதில் இவரும் ஒருவர்.

இதனைத் தொடர்ந்து மத்தியமுகாம் பதினொராம் கிராமத்திலுள்ள கமு/சது/ இறாணமடு இந்துக் கல்லூரிக்கு அதிபராக 2014 இல் நியமிக்கப்பட்ட இவர் அங்கு ஆறரை வருடகாலம் பணியாற்றினார் இக் காலப் பகுதியில்  01சீ  தரத்தில் இயங்கிய இப் பாடசாலையில் விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப பிரிவை ஆரம்பித்து 01ஏபி தர பாடசாலையாக தரமுயர்த்தினார்.

அத்துடன் கமு/சது/ இறாணமடு மகாவித்தியாலயமாக இயங்கிய இப் பாடசாலையின் நாமத்தை கமு/சது/

இறாணமடு இந்துக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்தார்.  மற்றும் அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டிகளில் இக் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் சாதனைகள் படைக்க ஊக்கமளித்து வெற்றியும் கண்டார்.இக் காலகட்டத்தில் இக் கல்லூரி மாணவர்கள் கலைத் திட்டம் இணைக் கலைத்திட்டம் என்பவற்றில் சாதனைகள் படைக்க வழி சமைத்தார்.

தனது கல்விப் பணியில் இருபத்தேழு வருட காலம் கஷ்ட அதிகஷ்ட பிரதேசப் பாடசாலைகளில் வினைத்திறன் விளைதிறன் மிக்க சேவையினை சிறப்பாக ஆற்றிய இவர் கல்முனை கல்வி வலயத்தில் உள்ள கமு/கமு/பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபராக 2019 இல் இடமாற்றம் பெற்று வந்து அங்கு ஐந்து வருடங்கள் பணியாற்றி இளைப்பாறினார்.

இக் காலத்தில் சைவத்திற்கும் தமிழுக்கும் அரும்பணியாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானுக்கு இப் பாடசாலை நுழைவாயில் அருகே சிலை நிறுவி அதனை கோலாகல விழாவெடுத்து திறந்து வைத்தார் மேலும் இப் பாடசாலையில் மாணவர் சேர்வு வீதத்தினையும் அதிகரித்தார்.

பேராதனைப் பல்கலைக் கழக கலைப் பட்டதாரியான இவர் மேலும் கல்வி முதுமானி பட்டத்தினையும் பெற்று தான் பிறந்த மண்ணின் முதலாவது கலைப்பட்டதாரி முதலாவது கல்வி முதுமானிப் பட்டதாரி என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார்.அத்துடன் பட்டப் பின் கல்வி டிப்ளோமா  (அதி விசேட சித்தி ) பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா என்பவற்றையும் பெற்று கல்வித் தகைமை தொழில் தகைமை என்பவற்றையும் உயர்த்திக் கொண்ட இவர் இந்து சமய தர்மாச்சாரியார் பட்டம் பெற்றவர்.

கல்விப் புலத்தில் பணியாற்றும் சகல தரப்பினருடனும் பெற்றோர் பழைய மாணவர்கள் மற்றுமுள்ளவர்களுடன் இறுக்கமான அன்பை விதைத்து நாளைய சந்ததியினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இப் பெருமகன் யாவருக்கும் பொதுவான வல்ல இறைவனின் நல்லாசியுடன் மனை மக்களுடன் நீடே வாழ வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். 

(துறைநீலாவணை நிருபர்)