பத்து நாட்களாகியும் காரைதீவில் தண்ணீர் இல்லை! மக்கள் கொதிப்பு; ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!!
(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த பத்து நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
தற்காலிகமாக, மாவடிப்பள்ளி இணைப்பிலிருந்து குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காரைதீவு பிரதேச காரியாலய பொறுப்பதிகாரி விஜயரெத்தினம் விஜயசாந்தன் கூறுகையில் ..
மாவடிப்பள்ளியில் இருந்து இன்று பெறப்படுகின்ற குடி நீர் காரைதீவில் வலயம் வலயமாக மாற்றி மாற்றி விநியோகிக்க இருக்கின்றோம். பிரதான குழாய்த்திருத்தம் எப்போது முடியும் என்று தற்போது கூற முடியாதுள்ளது என்றார்.
அதனிடையில் பிரதேச சபை முதல் தன்னார்வ அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர் என்று பல தரப்பினர் வவுசர் மூலம் வீதி வீதியாக குடிநீர் வழங்கிவருகின்றனர்.
எனினும் பிரதான நீர் விநியோகம் சீர்செய்வது தொடர்பில் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையைத் தவிர வேறு யாரும் கவனம் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இத்தடை தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் உயர் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நிந்தவூர் சாய்ந்தமருதைப் பொறுத்தவரை அருகில் இருந்து குடிநீர் பெறப்படுவதால் பாரிய தட்டுப்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காரைதீவுக்கு ஒரு வழியிலும் நீர் விநியோகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் காரைதீவு பொது மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குடிநீர் இன்று வரும், நாளை வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு கடந்த பத்து நாட்களாக கிடைத்தது ஏமாற்றமே.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்..
விடயங்கள் பெயரளவில் இருப்பதாகவும் குழாய் நீர் திருத்த செயற்பாடுகள் மந்தகதியில் நடைபெறுவதாகவும் அறியமுடிகிறது.
சபையின் பொறுப்பாளிகள் மக்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் சொல்லவில்லை.
களியோடை அருகே சேதமடைந்த பாலம் நிரந்தரமாக திருத்த படுகிறது. பாராட்டுக்கள்.
ஆனால் அத்தியாவசிய தேவையான தண்ணீர் தொடர்பாக இவ்வாறு பாராமுகமாக இருப்பது கவலை அளிக்கின்றது. பாரபட்சம் காட்டப் படுகிறது என்று கருதுகிறோம்.
விடயம் அறிந்த சமூக சேவையாளர்கள் உண்மை நிலையை அறிந்து செயற்பாட்டை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது திறம்பட நடந்தால் அவர்களுக்கு ஊக்கமளிப்பதன் மூலமோ இன்னும் துரிதப்படுத்தலாம்.
உண்மையில் மந்த கதியில் நடந்தாலோ அல்லது ஏதாவது இழுபறிகள் தடைகள் இருந்தாலோ கௌரவ ஜனாதிபதியின் 24 மணிநேர மக்கள் குறை சேவைக்கு அறிவித்து விடயத்தை ஓர் பொது ஆர்ப்பாட்டம் மூலம் கவன ஈர்ப்பு செய்வது அவசியமாகிறது.
இச் செயற்பாட்டிற்கு பொது கட்டமைப்புகள் மக்கள் சேவையாளர்கள் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் இருந்தால் முன்வர வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.